Tuesday, April 19, 2011

இது பிணங்களின் கதை - பப்புவா நியூ கினியா

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கும் நாடான பாப்புவா நியூ கினியாவில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு நாளில் என்னுடைய சொந்த ஊரில் நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.வேலைக்கு போகும் போது வண்டியை ஒட்டுபவனிடம் என்றும்போல இயல்பாக பேச முடியவில்லை.

அவன், "ஏன் செல்வன், இப்படி அமைதியா இருக்க? உடம்பு சரி இல்லையா? இல்லை,எதுவும் பிரச்சனையா?" என்று கேட்டான். அவனிடம் நடந்த விசயத்தை கூறினேன்.

"என்ன செல்வன், மனசை ரொம்ப குழப்பிக் கொள்ளாதே. இதெல்லாம் நம்ம கையில் இல்லை.நேற்று இரவு கூட என்னுடைய தம்பி இறந்து விட்டான். நம்ம இப்போ வேலைக்கு போற வழியில் வீட்டுல என்னோட பொண்டாட்டி கிட்ட காசு கொடுத்து அவளை என்னோட தம்பி வீட்டுக்கு போகச் சொல்லணும்."

"ரோய், என்ன சொல்ற? உன்னோட தம்பி இறந்திட்டானா? என்னாச்சு,எப்படி நடந்தது? நீ போகலையா?".

"செல்வன், உங்களுக்குத் தான் தெரியுமே. இங்க ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கிறதே பெரிசு. எனக்கு இன்னும் மூணு நாள் கழிச்சு தான் ஒய்வு நாள் வருது.தம்பி நேத்து காட்டுக்குள்ள விறகு வெட்ட போயி இருக்கான். அங்க ஒரு பப்புவாயன் ப்ளாக் பாம்பு இருக்கு. அது கடிச்சிடிச்சு. ரொம்ப விஷம் அது. அவன் விதி முடிந்தது."

"ச்சே.பாவம். என்னா வாழ்க்கை இது. அப்போ நீ உன் தம்பி பிணத்தை பார்க்க முடியாதுல? இதுக்கு கூட இல்லாமா எதுக்குப்பா வேலை பாக்கிற?".

"இல்லை,செல்வன். என்னோட தம்பி இங்க இருந்து 300 கிலோமீட்டர் தூரத்துல இருக்கான். இங்க மலை,காடுகள்ள போக்குவரத்து வசதி கிடையாது. எல்லாரும் போயி பார்க்க குறைஞ்சது பத்து நாள் ஆகும்,சொந்தக்காரங்க எல்லாரும் வருகிற வரைக்கும் பிணத்தை புதைக்க மாட்டோம்."

"பத்து நாளா? பரவாயில்லையே. எங்க நாட்டில செத்த அன்னைக்கே புதைத்து இல்லாட்டி எரித்து விடுவோம். அதுக்கு மேல விட்டா நாறிப் போயிடும்."

"என்னங்க செல்வன். இப்படி ஒரு மனுஷனுக்கு மரியாதை இல்லாம. சரி விடுங்க, அது உங்க ஊர் வழக்கம். போன வருஷம் எங்க சொந்தக்காரங்க வீட்டுல ஒருத்தர் இறந்திட்டார். அவரோட பையன் அமெரிக்காவில இருந்த இங்க வர ஒரு மாசம் ஆச்சு.அதுவரைக்கும் பிணத்தை பதப்படுத்தி வைத்து இருந்தோம்."

"நல்ல விஷயம் தான். ஆனா எங்க நாட்டில மக்கள் தொகை அதிகம்.இப்படிலாம் வச்சுகிட்டு இருக்க முடியாது.போக்குவரத்து வசதியும் நல்லா இருக்கு.என்னா ஒரு கஷ்டம், இது வெறும் சடங்கு போல் ஆகி விட்டது.இறந்த மனிதனை நினைத்துப் பார்க்கத் தான் ஆளும் இல்லை.,நேரமும் இல்லை."

இதற்கிடையில் அவன் வீடு வந்து விடவும் பொண்டாட்டியிடம் காசை கொடுத்து விட்டு வந்து பயணத்தைத் தொடர்ந்தோம். இடையில் ஒரு குகை வந்தது.

"செல்வன், இந்த குகை எனக்கு ரொம்ப விசேசமானது. எப்படி தெரியுமா? என்னுடைய முன்னோர்கள் இந்த குகையில் தான் வசித்து வந்தார்கள். உள்ளே திரியும் பாம்பு,பல்லி,பூச்சிகளை பிடித்து தின்பர். பயத்தால் வெளியே வர மாட்டார்கள். இறந்த பின்னர் அவர்கள் உடலை எடுத்து ஒரு மரத்தின் கிளையில் தொங்க விட்டு விடுவார்கள். ஒரு பத்து,பதினைந்து நாட்கள் கழித்து வெறும் எலும்புகளும் ,மண்டை ஓடும் கிடைக்கும். அந்த மண்டை ஓட்டை எடுத்து வைத்து எங்கள் முன்னோர்களை குல தெய்வமாக வழிபடுவோம். எல்லாமே நன்றாக போயிக் கொண்டு இருந்தது, இந்த ஆஸ்திரேலியாக்காரன் வரும் வரை. அவன் இந்த நாட்டில் புகுந்த பின்னர் பைபளின் இரண்டாம் வழிபாட்டின்படி இறந்தவர்களை வழிபடுவது குற்றமாக கருதப்பட்டது. 'இறந்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள்' எனவும் கூறினார். இவ்வாறு கூறி இங்கு இருந்த எங்கள் முன்னோர்களின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து கொண்டு போயி அவர்கள் நாட்டில் வைத்து உள்ளார்கள். மக்களுக்கும் இங்கு கிறிஸ்தவ மதத்தை பரப்பி இந்த பழக்கத்தை ஒழித்து விட்டனர். ஆனால் இன்றும் கூட ஒரு சிலர் அரசாங்கத்துக்கு தெரியாமல் மண்டை ஓட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் நர மாமிசமும் சாப்பிடுகிறார்கள். உயிரோடுக்கு இருக்கும் இந்த கறுப்பு மனிதனுக்கே மதிப்பு இல்லை என்கிற போது என்னோட முப்பாட்டன்களுக்கு இந்த வெள்ளைக்கார நாய்களிடம் என்னமரியாதை கிடைக்கும்?.சரி விடுங்க. என்னோட கதைய உங்ககிட்ட சொல்லி உங்களை இன்னும் கஷ்டமாக்கிட்டேன் போல.உங்க ஊர்ல இந்து மதத்துல பழைய காலத்துல என்ன பண்ணுவாங்க?."

"தெரியல,ரோய். எங்க ஊர்லயும் குல தெய்வ வழிபாடு இருக்கு. ஆயிரக்கணக்கான தெய்வங்களும் இந்து மதத்தில் உண்டு. ஆனால் கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்த பின்னர் இந்து மதத்திலும் ஒற்றைக் கடவுள் வழிபாடு என்று போயிக் கொண்டு இருக்கிறது. நான் அறிந்த வரையில் பிணங்களை புதைத்தும்,எரித்தும் தான் வந்து இருக்கிறோம். எகிப்தில் மம்மி செய்து வைத்து இருக்கிறார்கள். இந்தியாவிலும் இது போன்று எதுவும் வழக்கம் இருந்து இருக்கலாம். ஒரு வேளை புதைப்பது என்ற விசயமே இந்தியாவில் இருந்து தான் வந்து இருக்கும் என நான் நினைக்கிறேன்.ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை."


"இன்னைக்கி செத்தா, அடுத்த நாள் புதைச்சு ,அதுக்கு அடுத்த நாளைக்கு பால்" என்று நான் சிறுவனாக இருக்கும் போது இருந்த வழக்கம் இப்போது செத்த அன்னைக்கே பாலை ஊத்தி வேலையை முடித்து விடுகிறோம் . மின்சாரத்தில் எரிக்கிறது வந்துவேலை இன்னும் எளிதாக போயி விட்டது.

பிணத்தின் கதை பழங்காலத்தில் என்னவாக இருந்து இருக்கும் ?".

2 comments:

ஜோதிஜி said...

மரணத்தை அதிர்வில்லாமல் மனம் ஏற்றுக் கொள்ள ஏராளமான அனுபவங்களை உள்வாங்கியிருக்க வேண்டும்.

செம்மலர் செல்வன் said...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி,சார். #நெருங்கியவர்களின் மரணத்தை கடக்க நான் சிரமப்பட்டு இருக்கிறேன். பெரும்பாலான தருணங்களில் இறந்த பின் அவர்களின் முகத்தை நோக்க கூட தைரியம் இல்லாமல் இருந்து இருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் அனுபவங்களை உள்வாங்கினால் தான் மனது பக்குவப்படும்.