Monday, May 30, 2011

நீங்கள் எவ்வாறு அறியப்படுகிறீர்கள்?

எனது பால்ய காலம் முதலான தோழர் ஒருவர், "இவன் பெயர் செம்மலர். இவனைப் பற்றி என்ன சொல்வது? ம்... இவன் ஒரு சிந்தனையாளன்" என்று அவரது நண்பரிடம் அறிமுகப்படுத்தினார். எதிர் இருந்தவரும் சிறிதும் தயக்கமின்றி வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே தொடங்கிய உரையாடல் பல தளங்களில் விரிந்து கொண்டே சென்றது. தோழர் சொன்ன 'சிந்தனையாளன் ' என்ற அடையாளத்துக்கு அறவே நான் தகுதி இல்லாதவனாக இருந்த போதிலும் அவர் அறிமுகப்படுத்திய விதம் என்னை மகிழ்விக்கவே செய்தது.

ஏனென்றால் தொழில், பணம், அந்தஸ்து சார்ந்து (இவர் ஆசிரியர், பொறியாளர், மருத்துவர்,மென்பொருள் வல்லுநர், முதலாளி, வெளிநாட்டில் வேலை பார்ப்பவன்) என்று அறிமுகப்படுத்தப்படும் போது 'இவன் வேறு,நாம் வேறு' என்கிற தொனியில் ஒட்டாமல் தாமாகவே விலகிச் செல்லும் ஆட்களை நான் கண்டு இருக்கிறேன். ஒரு கோணத்தில் அவரவர் தொழில் சார்ந்து அறிமுகப்படுத்தப்படுவது கூட சாதியின் பெயரை சொல்லி கூப்பிடுவது போல் எனக்கு கூச்சமாக இருக்கிறது. பிழைப்புக்காக ஒருவன் செய்யும் தொழிலே அவனின் அடையாளம் ஆவது சரியாகாது. மனிதர்களின் இயல்பு,மனம்,குண நலன்கள்,செயல்பாடு,ஆர்வம் சார்ந்து குறிப்பிடப்பட்டால் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும்,அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவும் என நான் கருதுகிறேன்.

Wednesday, May 18, 2011

மூளையை மயக்கும் போதையாக Ink Whitener


கடந்த மாதத்தில் ஒரு நாள் "வியாபாரம் எப்படி போகுது ?" என்று பேனா முதலான எழுதுபோருட்களின் விற்பனை முகவராக இருக்கும் நண்பனிடம் கேட்டேன்.

" ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க .தேர்தல் நேரமா வேற இருக்கிறதால வியாபாரம் ரொம்ப டல். அதே நேரம் பேனா சேல்ஸ் கம்மியா இருந்தாலும் Whitener சேல்ஸ் குறையல. என்ன காரணம் தெரியுமா? இப்போ சில பசங்க அதுல இருக்கிற liquid (திரவம்) எடுத்து மூக்குல மோந்து பார்த்து போதை ஏறுறதுக்கு வாங்குறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வடநாட்டு பசங்க தான் வாங்கிட்டு இருந்தாங்க. இப்போ விஷயம் தெரிஞ்சு நிறைய நம்ம பசங்களும் வாங்குறாங்க. ஒரு சில கடைக்காரன் ஏன் எதுக்குன்னு கேட்பான். எல்லாரும் அப்படி நல்லவனா இருப்பான்? வியாபாரம் ஓடினா போதும்னு நினைப்பான். பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கிறதால எல்லாரும் ஈசியா வாங்கிடுறாங்க. கம்பனிக்காரன் வந்து ஆர்டர் எடுத்திட்டு போறான்,நான் சப்ளை பண்றேன்.எனக்கே சில நேரம் கஷ்டமாத் தான் இருக்கு".


கல்விக்காக மற்றும் சில முக்கிய ஆவணங்களில் பேனாவில் தவறாக எழுதியதை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளுக்கு அரசு வரிச்சலுகையும் கொடுத்து மக்கள் இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தும்போது வேதனையே ஏற்படுகிறது. டாஸ்மாக் மட்டுமே நம் கண் முன் நிற்கும் போதையாக தெரிகிறது. ஆனால் இது வெறும் உடலை மட்டும் பாதிக்காமல் மூளையையும் செயலிழக்க வைக்கிறது.

இந்த பதிவுக்காக தொடர்புடைய படத்தை இணைக்க கூகுளில் தேடும்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்த செய்தியையும் காண நேர்ந்தது.
http://timesofindia.indiatimes.com/city/chennai/More-city-schoolchildren-get-hooked-to-whiteners/articleshow/7879731.cms(சென்னையில் மட்டும் பள்ளிப்பருவத்தில் உள்ள இருபது பேர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்)


http://m.timesofindia.com/PDATOI/articleshow/7536840.cms
(கோவையில் 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்)


ஜெல் பேனா வந்த பின்னர் நிறைய மாணவர்கள் 'ஜெல்' பேனாவை பயன்படுத்துகிறார்கள். ஆகையால் இந்த கணிப்பொறி காலத்தில் அரசாங்கம் தடை செய்யும் வரை காத்துக் கொண்டு இருக்காமல் பள்ளிகள் தாமாகவே முன்வந்து Whitener பயன்பாட்டை ஒழித்து விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

Wednesday, May 4, 2011

எங்கேயும் காமம்



நகரத்தின் நெரிசலான கடைவீதி ஒன்றில் அழகான இளம்பெண் தன் காதலனிடம், "நான் உன்னை எல்லாம் லவ் பண்றேன் தெரியுமா,எப்பவுமே உன் நினைப்பு தான்" என்று சொல்லி விட்டு தன் மார்பின் மேல் வைத்து அழுத்திக் கொண்டு கைபேசியை வைத்து 'என்னோட நெஞ்சு துடிப்புல உன் பேரு கேக்குதாடா,செல்லம்' என்று சுற்றி இருப்பவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் , ..ம்ம்... அந்த காதலர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் காதலை பொது இடங்களில் எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள்!

இதைப்பற்றி நண்பனிடம் பேச்சுவாக்கில் கூறினேன்.

இதனை பொருட்படுத்தாமல் , "டேய்,இதெல்லாம் சும்மா. நான் போன வாரம் என்னோட பையனை கூப்பிட்டு படம் பார்க்க போனேன். கூட்டம் அதிகமாக இருக்கவும் மேல பாக்ஸ்க்கு போயிட்டேன். அங்க பார்த்தா,ஒரு நாலு ஜோடிடா. படம் ஆரம்பிச்ச உடனே அவங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. சரி,இடைவேளை விட்டதுக்கு அப்புறம் போயிடுவாங்கன்னு பார்த்தா வெளிச்சம்னு கூட பார்க்காம ஒரு ஜோடி சீட் மேலேயே படுத்து ச்சே,என்னால பொறுக்க முடியாம ஏன்டா இங்க வந்து தொல்லை பண்றீங்க,இதுக்கு லாட்ஜுக்கு போக வேண்டியது தானனு சொன்னதுக்கு அப்புறம் அந்த ஜோடி எந்திரிச்சி போனாங்க .பார்த்தா காலேஜ் படிக்கிறவங்க மாதிரி தான் இருந்தது."

திரை அரங்குகளில், பேருந்து நிலையங்களில், பேருந்தில், புகைவண்டிகளில், பூங்காக்களில், கோயில்களில் , பிரவுசிங் சென்டர்களில், கடற்கரை ஓரங்களில் இது போன்று பிறர் கவனத்தை சிதைக்கும் நிகழ்வுகள் அதிகமாகவே நடக்கின்றன. காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. காமம் அதை விட மேலான மனிதனின் அடிப்படை உணர்ச்சி. அது தனிப்பட்ட,அந்தரங்கமான விசயம்.அதை பொது இடத்தில் செய்வது என்ன வகையான கலாச்சாரமோ ? பண்பாடோ? இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் பணம் வைத்து இருப்பவன்,பண்ணை வீட்டிலும் பெரிய ஹோட்டல்களிலும் உடல் தேவைகளுக்கு பெண்களை இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். மற்றவர்கள் எங்கு போவார்கள்? கைபேசி வந்த பின்னர் தொடர்பு கொள்ள முடிந்தாலும்,தனிமைக்கு புகலிடம் தேடி அலைகிறார்கள். இதற்கு மும்பை,புனே, கொல்கட்டா போல தனியாக விபச்சார விடுதிகளை இங்கும் வைத்து தொலைத்து விடலாம். யாருக்கு தெரியும்,குடிக்க டாஸ்மாக் தொடங்கிய அரசு ஒருநாள் இதற்கும் அனுமதி கொடுக்கலாம். என்ன கலைஞர் குடும்பம்,இதையும் ஒரு தொழிலாக எடுத்து செய்யாமல் இருந்தால் சரி.

Monday, May 2, 2011

பொறியியல் கல்வி - பொறியில் சிக்கிக் கொண்ட எலிகள்


"இன்ஜினியரிங்க விட்டா வேற படிப்பே இல்லையான்னே,எல்லாரும் அதிலேயே சேரச் சொல்றாங்க.எனக்கு பிடிக்கவே இல்லை.இதை படிச்சு சாப்ட்வேர் பீல்டுக்குத் தான் போகணும். என்னைய எதுக்கு பயோலஜி க்ரூப் சேர்த்து விட்டாங்க.கம்ப்யூட்டர் சயன்ஸ் படிச்சு இருந்தாவாது கொஞ்சம் நல்லா இருந்து இருக்கும்." என்று கேட்ட தங்கைக்கு பதில் சொல்ல இயலாமல் சிரித்து மழுப்ப மட்டும் தான் முடிந்தது.

80,90 களில் பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே எல்லோரிடமும் மேலோங்கி இருக்கும். நுழைவுத் தேர்வு,பொதுத் தேர்வில் 70% விழுக்காடுக்கு மேலே எடுத்தால் தான் கல்லூரிக்கு உள்ளே நுழைய முடியும். கடந்த பத்தாண்டு கால ஆட்சியாளர்களால் இன்று பனிரெண்டாம் வகுப்பில் தேர்வானாலே இடம் கிடைக்கும் என்ற நிலை வந்து விட்டது. அனைவருக்கும் கல்வி கிடைப்பது நல்ல விசயமே. ஆனால் எதார்த்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில பொறியியல் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.பணத்தை புடுங்குவதில் மட்டும் எவரும் குறை வைப்பதில்லை.படிக்கும் பொறியியல் கல்வியும் ஆராய்ச்சிக்கு பயன்படாமல் அன்னிய நாடுகளுக்கு சேவை,உற்பத்தி,மென்பொருள் துறைக்கே பயன்படுகிறது.



இயற்பியல்,வேதியியல,கணிதம் படிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றால் தான் காலத்தை ஓட்ட முடியும் என ஆகி விட்ட காரணத்தால் கலை,அறிவியியல் கல்லூரிகள் காத்தாடுகின்றன. சட்டம் படிப்பவர்கள் செய்யும் கூத்தைக் கண்டு நான் வக்கீல் என்று வெளியில் சொல்ல கூட சிலர் யோசிக்கின்றனர்.மருத்துவம்,விவசாயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் பெருத்த அளவுக்கு பெருகவில்லை.


இனி எல்.கே.ஜி. யில் இருந்து ஆங்கிலம் கற்பது போல் பொறியியல் கல்வியை கூட ஒரு பாடமாக வைத்து விடலாம் என்கிற அளவுக்கு பொறியியல் கல்லூரி மோகம் இன்றைய பெற்றோர்களிடம் இருக்கிறது.

பிழைக்க மட்டுமே கல்வி தேவை என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு பொறியியல் என்ற பொறியில் சிக்கிக் கொண்ட எலிகளாக நாம் இருக்கிறோம்.

சோறுக்குப் பதிலாக இரும்பை பொரியல் (பொறியியல்) போட்டு திங்கும் காலமும் வரலாம்!