Wednesday, July 27, 2011

ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்காதீர்கள்

கட்சி என்ற சொல்லை குடும்பச் சொத்தாகவும், அரசியல் என்ற சொல்லை கொச்சையாகவும், ஊழல் என்ற சொல்லை பிரபலப்படுத்திய கருணாநிதிக்கு ஒரு அரசியல்வாதியாக  அதைச் செய்ய உரிமை இருக்கிறது.அதற்கு பிரதிபலனாக நிறைய அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார். அதே நேரம் அதற்கு போட்டியாக அடக்குமுறை  என்ற ஆயுதத்தால்  அனைவரையும் கட்டுக்குள் ஒரு வித பதற்றத்திலே வைத்து இருக்கும் ஒரு எதேச்சதிகார ஆணவப்போக்கு கொண்ட பெண்மணியை,ஒரு பெண் என்பதற்காக ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல,அதற்கு அவர் எந்த வகையிலும் உரியவராக நடந்து கொண்டதே இல்லை. துதிபாடிகள் எல்லாம் தலைவன்,தலைவி என்று தான் குரல் கொடுப்பார்கள். எம்.ஜி.ஆர். , கருணாநிதி  தலைவர் என்று தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே மாமா,மச்சான் போன்ற உறவுச் சொற்கள் வேறு தொனிகளில் தான் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பிடித்தால் "புரட்சித் தலைவி" என்று அழையுங்கள். 'காவிரித் தாய்', 'மகாமகத் தாய்', 'ஈழத் தாய்' என்று புகழவும் செய்யுங்கள்.இதை  அரசியல் ரீதியாக கூறாமல் உணர்வு அடிப்படையிலே  கூறுகிறேன். தயவு செய்து "அம்மா" என்று சொல்லுக்கு மட்டும் அகராதியில் புது விளக்கங்கள் சேர்க்காதீர்கள் !  

Wednesday, July 20, 2011

போவதும்,வருவதும் காதல்

நான் ஏன் அன்று அவளிடம் அந்த அளவிற்கு மூர்க்கமா நடந்து கொண்டேன். என்ன இருந்தாலும் நான் அவளை அடித்து இருக்க கூடாது? இப்பொழுது புலம்பி மட்டும் என்ன புண்ணியம்,அது சரி இந்தப் பையனை விட்டுப் போக  அவளுக்கு எப்படி மனசு வந்தது? இப்போது அவளை அடித்ததில் தவறு இல்லை என்றே படுகிறது.

நான் உன்னை திருமணம் செய்வதற்காக நீ சார்ந்து இருக்கிற மதத்தைப் படித்து,தழுவினேன். எங்கள் வீட்டிலும் பையன் சந்தோசம் தான் முக்கியம் என்று நமக்கு ஒரு மறுப்பும் சொல்லவில்லையே.அந்த பெருந்தன்மை உன்னிடம் ஏன் இல்லாமல் போனது? நம் மகனுக்கு ஒரு விசேச நாளில் சந்தனமும்,குங்குமமும் வைத்து விட என் தாய்க்கு உரிமை இல்லையா? அது உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதை நீ வீட்டில் வந்து என்னிடம் சொல்ல வேண்டியது தானே? என் தாயின் கண்  முன்னே அதை அழித்துக் காட்டி என்ன சாதிக்கப் போகிறாய்?  நம் மகன் நீ நம்பும் மதத்தையே வழிபடட்டும்.எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. உனக்கே தெரியும்,நான் எந்த மதத்தையும் நம்புவன் அல்ல. நிலைமை அப்படி இருக்க ஏன் நீ இப்போதெல்லாம் வெறி பிடித்தவள் போல நடந்து கொள்கிறாய்?


நாம் நம்பாத ஒன்றை ஏற்றுக் கொண்டதில் நான் என்ன பெரிதாக விட்டுக் கொடுத்து இருக்கிறேன். நானும் அவளை அங்கே அடித்து இருக்க கூடாது. அது என் மிகப்பெரிய தவறு தான். என்னை நம்பி அவளுடைய வாழ்க்கையையே ஒப்படைத்து இருக்கிறாள்.அம்மாவை சமாதானப்படுத்தி கொள்ளலாம். அவள் எங்கு போயி இருப்பாள் ? பையனை அம்மா வீட்டில் விட்டு விட்டு அவளை தேடத் தொடங்க வேண்டும்.

யாரோ பொடனியில் அடிப்பது போல இருந்தது.

"என்னப்பா,மாஸ் முடிஞ்சு நான் இங்க வந்து அஞ்சு நிமிசமா நிக்கிறேன். எந்த லோகத்தில் இருக்க நீ இப்போ. உன்னைய  நம்பி எப்படிடா என் கழுத்தை நீட்டுவது?"?? .

Monday, July 4, 2011

யாராய் இருப்பாள் அவள் !

இரைச்சலுடன் வந்து நின்ற அரசுப் பேருந்தில் கூட்டம் குறைவாக இருப்பது போல் தென்படவும் பின் வாசலில் ஏறி காலி இருக்கையைத் தேடி முன்னே நகர்ந்து கொண்டு இருந்தேன். "எங்க போறீங்க,டிக்கட்டை எடுத்திட்டு முன்னாடி போங்க"  என்ற கண்டக்டரிடம் சீட்டை வாங்கி கொள்ளும்போது சிட்கோ கேட் வந்து விட்டது. ட்ரைவருக்கு பின் புறம் இருந்த  மூன்று பேரும் அமரும் சீட்டில் ஒரு பெண் மட்டுமே அமர்ந்து இருந்தாள். கண்டக்டரிடம் சொல்லச் சொல்லி மாறி உக்காரச் வைக்கலாம் என நினைத்தால் ஆள் கடைசி சீட்டுக்குச் சென்று பணத்தை எண்ணத்  தொடங்கி இருந்தார். எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இருந்தாலும் ஆபத்துக்கு  பாவம்  இல்லை  என்ற கணக்கில் "ஏங்க,கொஞ்சம் மாறி உக்கார முடியுமா? " என்றேன்."பரவாயில்லை,நீங்களும்  இங்கேயே  உக்காருங்க " என்று சொல்லி விட்டு சன்னலோரத்துக்கு  அவள் மாறினாள்.சார்ஜ் இல்லாத மொபைல்,பண்பலை வானொலி,விஜய் படம்,புத்தகம் இப்படி எதுவும் இல்லாமல்  மதிய நேர  புழுக்கம் வேறு சேர்ந்து கொண்டு பெரும் அவஸ்தையாக இருந்தது.நம்மை மதித்து அருகில் அமர வைத்து இருக்கிறாள் என்ற எண்ணத்தில் சைட் கூட அடிக்கத் தோன்றாமல் முன்னோக்கி பார்த்துக் கொண்டே இருந்தேன். யாராவது பொள்ளாச்சியில் இறங்கினால் சன்னலோரமாக இருக்கிற வேறு ஒரு சீட்டுக்கு மாற வேண்டும்.


யார் கெட்ட  நேரமோ பொள்ளாச்சியில் ஒருத்தரும் இறங்கும் பாட்டைக் காணோம்,வெளியில் நிற்கும் மக்களும் தனியார் பஸ்சுக்கு காத்துக் கொண்டு தான் நிற்கின்றனர்.இப்போது காற்றுக்காகவும்,கண் வறட்சிக்காகவும் கண்ணை அவள் இருக்கும் பக்கம் திருப்ப வேண்டி வந்தது. அவள் சில புத்தகங்களுக்கு மேலாக  கைபேசியை வைத்து விளையாடி கொண்டு இருக்கிறாள்.கல்லூரியில் படிக்கிற பாவனையில் இருந்தாள். விடுதியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு செல்பவளாக இருக்கக் கூடும். அவசியமற்ற இவைகளை விட அவள் என் கண்களுக்கு மிகவும் அழகாக தோன்றினாள்.உடுமலைபேட்டைக்கு செல்லும் முன் இடையில் அங்கங்கு நிறுத்திய இடங்களில் வயதான பெண்கள் ஏறினர். அவர்களும் நாங்கள் காதலர்களோ என்ற எண்ணத்தில் தொந்தரவு செய்யவில்லை.நானும் எந்திரிக்க முயற்சி செய்யாவிட்டாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டு இருந்தது.உடுமலைபேட்டை அடையும் முன் அவ்வப்போது அவள் என்னை பார்ப்பது போல் ஒரு  குறுகுறுப்பு இருந்தது.எனக்கும் 'நீங்க யாரு,என்னா பண்றீங்க' என்று கேக்க வேண்டும் எண்ணம் இருந்தது. குறைந்தபட்சம் நன்றியையாவது தெரிவிக்க வேண்டும் என்ற உந்தல் இருந்து வந்தது.

பஸ் உடுமலைபேட்டையை வந்து சேர்ந்து விட்டது.கடைசி சீட்டில் மட்டும் ஒரு ஆள் எழுவதும் அந்த இடத்திற்கு இரண்டு பேர் சண்டை போடுவதும் தெரிந்தது.வண்டியில் இப்போது ஏறிய ஆட்கள் வந்து அருகில் நிற்கின்றனர். நான் எந்திரித்து வழி விடுவது நலம் என எந்திரிக்க எத்தனித்தேன்.

"செம்மலர் நீங்க ஏன் .. ,நீங்க என் பக்கமா வந்து உக்காருங்க.யாரும் வந்தா அந்த பக்கம் உக்காரட்டும்."


இப்பொழுது அந்தப் பொண்ணை முழுவதுமாக உற்றுப் பார்த்தேன்.இவளை இதற்கு முன் எங்கும் பார்த்து,பேசிய பரிச்சயம் இல்லையே,அப்புறம்  எப்படி இவளுக்கு என் பெயர் தெரிந்தது?


"இல்லமா,நான் இங்க ஒரு பிரண்டைப் பார்க்கணும்,அப்புறம் பார்ப்போம்" என்று சொல்லி விட்டு ஓடும் பஸ்சில் இருந்து குதிக்க வேண்டியதாகப்  போயிற்று. யாராய் இருப்பாள் அவள் ! 

Friday, July 1, 2011

அம்மா

எவருக்கும் தொடக் கூட பிடிக்காத,சீண்டாத  ஒரு சவலைப் பிள்ளையை அமூதூட்டி தோளிலும்,மடியுளும் கிடத்தி என்னை ஆளாக்கிய அன்னை நீ தான். உன்னில் பாதியும்,தந்தையில் பாதியுமாக நான் இருந்த போதும் உன்னையே முழுவதுமாக வரித்துக் கொண்டு நான் இருப்பதாக பிறர் கூறக் கேட்கும்போது அடையும் மகிழ்ச்சியை நான் வேறு எதிலும் பெற்றதில்லை. நான் பிறந்தது முதல் எனக்காக நீ பட்ட துன்பங்களும்,துயரங்களும் இன்னும் என் மனதில் ஆழமான வடுவாகவே நிற்கின்றன.பெற்ற கடனை செய்வதாக மட்டும் அல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும்,ஆத்மார்த்தமாகவும் செய்தாய்.இங்கு தான் மகனுக்குரிய ஆற்றாமையும் எனக்குள் எழுகிறது. என் பொருட்டு நீ படும் வேதனைகளை என்னால் காண சகியவில்லை.

இந்தக் கடிதத்தை யாராவது வாசிக்க நீ கேட்கையில் என்னுடைய உடல் எங்கு போனது என அறியாமல் என் உயிர் பிரிந்து இருக்கும். நீயும் அதைக் கண்டு துன்புற வேண்டாம் என்றே நானும் விரும்புகிறேன். நினைவு இருந்த நாள் முதல் நினைவு இல்லாது போன இந்நாளிலும்  நீயே என்  அம்மா. நினைவுகளைத் திரட்டி எழுத முயலும்போது கைபேசி ஒலிக்கிறது. 

"ஏங்க
,இன்னும் ஆபிசில் உக்காந்து என்னா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இங்க உங்க மக பண்ற அடம் தாங்க முடியல. உங்க அம்மாவை பார்க்கணும்னு ஒரே பிடிவாதம்.நம்ம என்னா சென்னையிலா இருக்கோம்,உடனே போறதுக்குன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா?""பதில் கூற முடியாமல் கண்ணீர் முட்டுகிறது.இதுவரை வெள்ளைத் தாளில் எழுதியதை கிழித்து எறிகிறேன்.

நீ எங்கும்,என்றும்,எக்கணத்திலும் என்னோடு இருக்கிறாய் அம்மா ! ! !