Friday, June 24, 2011

தீராத கணங்கள்

கால்களுக்கு இடையில் ஏதோ ஒன்று ஊர்வதை தட்டி விடுவதற்காக போர்வையை உதறி விட்டு படுக்கையில் இருந்து எழுந்தான். எலியா,பூச்சியா என்று பகுத்தறிய முடியாத  வஸ்து ஒன்று ஓடியது. அதை கொல்லவோ, அடிக்கவோ மனசில்லை. இதுவரை  நாம் வாழ்வதற்காக எத்தனை உயிர்களை மிதித்துக் கொன்று, ம்ம். என்ன காலையிலே இப்படி ஒரு சிந்தனை. மணி எத்தனை என்று பார்ப்பதற்காக செல்லை எடுத்து பார்த்தால் செல் அணைந்து விட்டு இருந்தது.அதை எடுத்து பிளக்கில் சொருகி விட்டு கதவை திறந்து பார்த்தால் வெளியில் மழை பெய்வதுமாக நேரம் கணிக்க முடியாததாய் இருந்தது.பத்துக்கு நாலு அடி கணக்கில் ஒரு எலிப் பொந்து.இதற்குள் இரண்டு கட்டில்கள் வேறு. கழிப்பதற்கும்,குளிப்பதற்கும் ஒன்று தனியாக ஒடுக்கி விடப்பட்டு இருந்தது. எப்போதும் அவசியப்படாத ஏ.சி. ஓடிக் கொண்டே இருக்கிறது.விட்டு போன தூக்கத்தின் மிச்சம் கவலையை கொடுத்து கொண்டு இருந்தது. உறக்கத்துக்கும்,விழிப்புக்கும் பேதமற்றதாய் இதுபோன்ற கணங்கள் தொடருவதைப் பற்றிய ஏக்கத்தோடு எப்படி,எப்பொழுது வெளியே செல்வது? என்ற கேள்வி மனத்திலே தங்கி இருந்தது. 


குளியலறைக்குள் உள்ளே நுழைந்து கதவை தாழிட்ட இரண்டு நிமிடங்களில் யாரோ கதவை தட்டுவதை போன்ற சத்தம் கேட்டது.பதில் கொடுக்கும் முன்னே ஒரு பெண் உள்ளே நுழைவதை கதவில்  உள்ள  சிறிய  சந்தின்  வழியாக காண முடிந்தது.தான் தற்போது இருக்கும் நிலையில் வெளியே உடனே வர முடியாது.அவளாக போன பின்னால் வெளியே வருவது நல்லது. இவள் அறையை சுத்தம் செய்ய வந்து இருக்கிறாள் என்றால் மற்ற அனைவரும் வேலைக்கு போயி விட்டார்கள்.இந்நேரம் நம்மை எல்லோரும் தேடிக் கொண்டு இருப்பார்களே ! என்ற கவலை சூழ்ந்து கொண்டது. யாருக்கு மூக்கு வேர்த்ததோ செல் ஒலிக்கும் சத்தம் கேட்கிறது. அலுவலகமாகத் தான் இருக்கும்.வேறு  மார்க்கம் இல்லை,துண்டோடு வெளியே வர வேண்டியது தான்.

சிறிது நேரம் கழித்து அவன் அலறும் சத்தம் மட்டுமே கேட்டது:) 

Monday, June 13, 2011

கம்யூனிசம் தமிழகத்தில் வாழ்கிறதா? வீழ்கிறதா?

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களின் முடிவில் இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும்,கேரளாவிலும் ஆட்சியை இழக்க நேரிட்டது. இங்கு தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கு வகித்த அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இங்கு நிறைய இடங்களை கைப்பற்ற முடிந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மே.வ.,கேரளாவில் பலம் குறைந்தது போலவும்,தமிழகத்தில் பலம் குறையாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றம் நிலவுகிறது.என்னுடைய பார்வையில், கேரளாவில்  அச்சுதானந்தனின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த இடங்களைப்  பார்க்கில் ஒரு வகையில் இடதுசாரிகளுக்கு வெற்றியே. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் எழுச்சி,மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் திரிணாமுல் இருப்பது,நந்திகிராம்,சிங்கூர் பிரச்சனைகளில் புத்ததேவின் அலட்சியம்,தொடர்ச்சியாக 35 ஆண்டுகள் பதவியில் இருந்ததால் ஏற்பட்ட சலிப்பும் தோல்விக்கு காரணங்களாக விளங்குகிறது. இந்த நிலை இப்படியே தொடரும் என எதிர்பார்க்க முடியாது.ஏனென்றால் இந்த தோல்விகளில் ஒரு செய்தி இருக்கிறது. கட்சியை விட அச்சுதானந்தன் பலமானவராக மாறி இருக்கிறார். ஜோதிபாசுவின் இடத்தை புத்ததேவால் நிரப்ப முடியவில்லை. ஆகையால் இந்த  இரண்டு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர இ.எம்.எஸ்.,ஜோதிபாசு,அச்சுதானந்தன் மாதிரியான  ஆளுமைகளும் கட்சியின் அமைப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்  மட்டுமே சாத்தியமாகும் என கருதுகிறேன்.

இந்த இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலைமை பிற தேசிய வலதுசாரி பா.ஜ.க,,காங்கிரஸ் கட்சிகளின் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டதாக நான் கணிக்கிறேன்.இந்த தேர்தலின் வெற்றியில் மற்றவர்களை விட விஜயகாந்தின் பங்களிப்பும்,கருணாநிதி எதிர்ப்புமே அ.தி.மு.க. வுக்கு வெற்றியைத் தேடித் தந்து உள்ளது. இதுவே இடதுசாரிகளின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். தொண்டர்களே இல்லாமல் ராகுல் காந்தியின் இளம்படை  நடைப்பயணம் மேற்கொள்கிறது,தேர்தலில் நின்று மரண  அடி வாங்குகிறது. தமிழகத்தின் நிலைமை சரிவரத் தெரியாமல் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ராகுல் காந்திக்கு இருக்கும் ஆர்வம் கூட இடதுசாரிகளுக்கு தமிழகத்தின் மேல் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. தேசியத்தையும்,திராவிடத்தையும் ஒன்றாக முரண்பாடாக கட்சிப் பெயரில் வைத்து இருந்தாலும் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகளில் மாநிலக் கட்சிக்கு உரிய வளர்ச்சியை விஜயகாந்த் பெற்று வருவது தி.மு.க. வினருக்கு  மட்டுமல்ல பா.ஜ.க,,காங்கிரஸ்,இடதுசாரிகள்,ம.தி.மு.க. மற்றும் சாதிக் கட்சிகள் உட்பட அனைவருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை எழுப்பி உள்ளது. கருணாநிதி  தன்  குடும்பத்தை மட்டும் பேணி காப்பதில் முனைப்பாக இருப்பதால் கட்சியின் எதிர்காலம் ஸ்டாலினின் அடுத்தகட்ட  செயல்பாடுகளிலே இருக்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க வுக்கு மாற்றாக கட்சி தொடங்கிய வை.கோ. அங்கும்,இங்கும் மாறி மாறி இன்று திக்குதிசை தெரியாத காட்டில் நிற்கிறார்.

இந்த சூழலில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் தோழர்களே? ஜெயலலிதா உங்களுக்கு விருப்பமில்லாத தொகுதிகளை கொடுத்தவுடன் விஜயகாந்துடன் ஓடிப்போயி பேசுகிறீர்கள். கருணாநிதிக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையில் ஓடிக் கொண்டு இருந்த நீங்கள் இனிமேல் ஓடி தஞ்சம் அடைய இன்னொருவர் இருக்கிறார் அவ்வளவே. ஒருநாள் விஜய் பின்னாடி கூட நீங்கள் ஓடக்கூடும்.மாநிலங்களுக்கு  இடையேயான பிரச்சனைகளில் தேசியக் கட்சியாக செயல்படும் நீங்கள் காங்கிரஸ்,பா,.ஜ.க., வை விட குழப்பமான முடிவுகளையே எடுக்கிறீர்கள். காவேரி நதி நீர் விவகாரத்தில்  நீங்கள் காட்டும்  ஆர்வம் துளி கூட முல்லைப் பெரியாறு, சேலம் ரயில்வே கோட்ட  விவகாரத்தில்  காட்டவே இல்லை. உலகின் எந்த மூலையில் ஒரு சிறுபான்மை இனம் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் தாங்கள் கூர்க்கா லேண்ட், தமிழ் ஈழ விவகாரங்களில் முதலாளித்துவ நாடுகள் போல நடப்பது ஏன்? இராக்,லிபியா,ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவால் தாக்கப்படும் நாடுகளுக்கு வழியும் உங்கள் கண்ணீர் திபத்,அருணாச்சல் விசயங்களில் சீனாவை எதிர்த்து குரல் கொடுக்காது ஏன்? ரஷ்யாவின் ஆதிக்கத்தால் அருகில் உள்ள நாடுகள் பாதிக்கப்படும்போது நீங்கள் எந்த எதிர்வினையும் கொடுப்பதில்லையே ஏன்?தீக்கதிர் பத்திரிக்கையில் கேரளா அரசின் விளம்பரங்கள்,செயல்பாடுகள் எல்லாம் வருகிறதே,கேரளத்தில் தமிழகத்தின் நிகழ்வுகளை தெரிவிக்கும் விதமாக ஏதேனும் செய்கிறீர்களா?அச்சுதானந்தன் போன்றவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் பினராயி விஜயன்,கொடியேறி பாலகிருஷ்ணன் போன்றவர்களுக்காக பிரகாஷ் காரத் வக்காலத்து வாங்குகிறார்? அப்போது அது சர்வாதிகார தலைமைப் பண்பு இல்லையா?

இன்றும் பணம்,பதவி போன்ற சுகங்களுக்கு அலையாமல் கட்சிக்காக,கொள்கைக்காக வாழும்,பாடுபடும்  தோழர்கள் இடதுசாரிகளில் மட்டுமே காண முடிகிறது. உள்ளூர் பிரச்சனைகள் முதல் சர்வதேச பிரச்சனைகள் வரை  குரல் கொடுக்கும் முதல் ஆளாக கம்யூனிஸ்ட்கள்  இருக்கிறார்கள். தொழிலாளர்கள்,ஒடுக்கப்பட்ட,பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதில் முதன்மையாக  இருக்கிறார்கள். தஞ்சையில் நிலவுடமை கொடுமைகளுக்கு எதிராக போராடியதும், இன்றளவும் தொழிலாள வர்க்கத்துக்கு போராடுவதிலும்,சாதிய முரண்பாடுகளை களைவதிலும் முன் நிற்கிறது. உள்ளூர் பண்பாடு,கலாச்சாரம்,கலை,இலக்கியம் இவற்றை வளர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டு உள்ளது.


அதே நேரத்தில் விருதுக்காக அனுப்பப்படும் திரைப்படங்கள்,தீவிர இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி பெரும்பான்மையினரை  சென்று அடைவது இல்லையோ அதே நிலைமை இடதுசாரி கட்சிகளுக்கும் இங்கு நேர்கிறது. எப்போதும் ஒதுக்கப்படும்,புறக்கணிக்கப்படும் மக்களுக்காக மட்டும் போராடிக் கொண்டு இருந்தால் பெரும்பான்மை சமூகம் அப்படியே தான் இருக்கும். நீங்கள் போராட ஒரு கூட்டம் வேண்டும்,அந்த வாக்கு வங்கி உங்களுக்கு வேண்டும்.

இடதுசாரிகள் பக்கம் இருந்தால் பணம் இல்லாமல் தங்கள் தேவையை தீர்த்து வைப்பார்கள் என்ற அளவில் மட்டுமே தொழிற் சங்கங்களில்  இருக்கும் அரசுப் பணியாளர்கள் (போக்குவரத்து,மின்துறை உட்பட) எண்ணம் இருப்பதை நான் கண்டு இருக்கிறேன்.மேலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்,கடை அடைப்பு போன்ற நிகழ்வுகளைப்  பார்க்கும் சரிபாதி மக்கள் 'கம்யூனிஸ்ட்கள் இப்படித் தான்" என்று  புலம்புவதைப் பார்க்க முடிகிறது. முடிவில் மத,சாதி ரீதியான கட்சிகளுக்கு எப்படி சரிபாதி எதிர்ப்பு இருக்கிறதோ அப்படியே உங்களுக்கும் வந்து விடுகிறது.
சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்கவே போராட வேண்டும்.அதே அடுக்கில் நிறுத்தி வைக்க அல்ல.அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான கட்சி என்ற நம்பகத்தன்மையை கொண்டு வருவதிலே வெற்றியின் சூட்சமம் இருக்கிறது. சமூகநீதி,சமத்துவம் பேசிக் கொண்டே இருந்தால் மட்டும் வந்து விடாது.

இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற அன்னா கசாரேக்களும்,ராம் தேவ்களும் உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின்  பின்னால் செல்லும் மக்களை காணும் போது வலதுசாரிகள் மட்டுமல்ல,இடதுசாரிகளும் இந்த நாட்டை வழி நடத்த லாயக்கில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டதாக கருத வேண்டி இருக்கிறது.

நரேந்திர மோடியை வைத்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும் போது நீங்கள் ஏன்  உங்களிடம் உள்ள நல்ல  ஆளுமைகளை முன்னிறுத்தக் கூடாது? ரஷ்யாவில் கூட புடின் என்னும் சர்வாதிகார வல்லமை கொண்டவரே ஆட்சி செய்கிறார்,கம்யூனிச  கொள்கை மட்டும் கொண்டு அல்ல.இது ஒரு வகையில் பிடரேல் காஸ்ட்ரோவுக்கு கூட பொருந்தும் என நான் நினைக்கிறேன். கொள்கைகளுக்கு  மட்டும் முன்னுரிமை கொடுக்காமல்  ஜோதிபாசு,அச்சுதானந்தன் மாதிரியான  தனிநபர்களையும்  நிறுத்தலாமே? பிறரை இது மாதிரி ஆட்சி செய்யுங்கள் என்று வலியுறுத்தும் நீங்கள் ஏன் ஆட்சிப் பொறுப்புக்கு வர முயலக்கூடாது ? திராவிடக்  கட்சிகள், காங்கிரசை  கீழே தள்ளி எந்திரிக்க விடாமல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது போல் நீங்களும் வரலாமல்லவா? 

கால மாற்றத்திற்கு ஏற்றவாறு சிறிதும் சமரசமின்றி,சுய பரிசோதனை இன்றி நாங்கள் இப்படியே தான் தமிழகத்தில்  அரசியல் செய்வோம் என்றால் பன்னும்,டீயும் சாப்பிட்டு விட்டு உண்டியலைக் குலுக்கிக்  கொண்டே இருங்கள்,தோழர்களே !

 "கம்யூனிசம் பிடிக்கும்,கம்யூனிஸ்ட்களைப் பிடிக்காது" என்று பொதுவாக சொல்லப்படுவது போல் எனக்குச்  சொல்லத் தெரியவில்லை.செம்மலர் செல்வன் என்ற என்னுடைய இயற்பெயரை ஒரு கம்யூனிசத் தோழர் ஒருவரே எனக்கு சூட்டினார். எவ்வித சார்புமின்றி மற்ற திராவிடக்  கட்சிகள் மீதோ,தேசிய கட்சிகள் வைக்க முடியாத சூழலில் சராசரியான,மேம்போக்கான,ஆய்வுகளற்ற,ஆழமற்ற ஒரு அரசியல் பார்வையில் இந்த கருத்துகளை முன் வைக்கிறேன்.

Saturday, June 11, 2011

நாஞ்சில் என்னுமொரு நாடு

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே தென்மூலையில் எல்லையாக  அமைந்து இருக்கும் கன்னியாகுமரியை கொண்டுள்ள நாஞ்சில் நாட்டிற்கு நிறைய சிறப்புகள் உண்டு. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி ,திருவள்ளுவர் சிலை,சுசீந்திரம்,திற்பரப்பு அருவி,பேச்சிப்பாறை அணை,பத்மநாபபுரம் அரண்மனை,முட்டம் முதலான பல இடங்கள் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு நாடு. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை,தோழர் ஜீவா,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்,தோப்பில் முகமது மீரான்,அரசியல்வாதிகள் நாஞ்சில் மனோகரன்,நாஞ்சில் சம்பத் என்று கலை,இலக்கியம்,அரசியல் என்று அனைத்திலும்  முத்திரை  பதித்த,பதிப்பவர்கள் வாழ்ந்த மண் இது. மக்களின் தொடர்ச்சியான உணர்ச்சிகரமான போராட்டங்களின் விளைவாகவே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்பது வரலாறு.


மலையாளத்தை  தாய்மொழியாக கொண்ட மக்கள் அதிகமாக வாழும் குமரி  மாவட்டம், "நெல்லை எனக்கு எல்லை,குமரி எனக்கு தொல்லை" என்று கருணாநிதி கூறியது போல  நமது ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகிறது. இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும்,இந்துக்களுக்கும் உறவு அவ்வளவு சுமூகமாக  இல்லாதது தேர்தலில் கூட பிரதிபலிக்கிறது.ஒட்டுமொத்த தமிழகமும் பா.ஜ .க.வை புறக்கணிக்கும் சமயத்திலும் இங்கு அவர்கள் பெருவாரியான வாக்குகள் பெறுகின்றனர்.திராவிடக் கட்சிகளை விட காங்கிரசும்,செங்கொடித் தோழர்களும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது உள்ளூர் சார்ந்த அரசியல் (அ) கேரளா சார்ந்த அரசியல் (அ) தேசிய அரசியல்  சார்ந்த நிலைப்பாடு மட்டுமே இங்கு  பிரதிபலிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.


வெளிநாடுகளிலும்,வெளியூர்களிலும் புலம் பெயர்ந்து  வாழ்பவர்கள் அதிகம். வரதட்சணை அள்ளிக் கொடுக்கப்படும் பகுதியாகவும் விளங்குகிறது. என்னுடைய நண்பர் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக தன் உடன் பிறந்தவர்கள் திருமணத்திற்காக  வெளிநாட்டில் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்.


இவர்கள் பேசும் வட்டார பேச்சு மொழி வழக்கு மலையாளம் போல  தோன்றுகிறது.இதன் பொருட்டு நம்மில் பலர் அவர்களை மலையாளிகள் என்றும் கூட முத்திரை குத்துகின்றனர்.ஆனால் யதார்த்தத்தில் மலையாளிகளை விடவும் பிற மொழி கலப்பின்றி இவர்கள் தான் தமிழும்,மலையாளம் கலந்த  அச்சு அசலான மொழி பேசுகின்றனர்.அதனாலே பலருக்கு புரிவதில்லை என்று நான் கருதுகிறேன்.அவர்களின் பேச்சில் அந்த வட்டாரத்துக்கு உரித்தான மொழி,பண்பாடு,கலாச்சாரம்,சமூகம்,இயல்பு,உள்ளார்ந்த உணர்வு ஆகிய குறியீடுகளைப் பார்க்க முடிவதால் அந்தப் பேச்சு என்னை மிகவும் கவர்கிறது.
 


இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் இங்கு எனக்கு பிடிக்காதவை ,விளங்காதவை சில இருக்கின்றது. நாகர்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடும் பொது இடங்களிலோ, கடைக்கோ,உணவகத்துக்கோ சென்றால் வெளியூர் மனிதனைப்  பொருட்படுத்தாத,மதிக்கப்படாத நிலையை காண முடிகிறது.மற்ற ஊர்களில் போலியாகவாது முகமன் செய்து வரவேற்பார்கள்.இங்கு அதற்கு வாய்ப்பே இல்லை.நல்ல கல்வியறிவு,பொருளாதார வசதி,யாருக்கும் தலை வணங்காத குணம் இவ்வூர் மக்களிடம் அதிகம் உண்டு.அதனால் எவரையும் சட்டை செய்வதில்லையோ என்னவோ?  இதற்கான காரண  காரியங்கள்  வேறு ரூபத்திலும் இருக்கலாம். சில இடங்களில் அவர்களைப் பற்றி பொதுவாக ஏற்படும் குழப்பம் (தமிழனா,மலையாளியா என்ற) அந்த ஊரில் நடமாடும்போது நமக்கே "நாம் யார்?" என்ற கேள்வி எழும்பி நம்மை இயல்பில் இல்லாமல் இருக்கச் செய்து விடுகிறது. சில வேளைகளில்  திருவனந்தபுரம்,கொச்சின் போன்ற ஊர்களே பரவாயில்லை என்ற எண்ணம் தலைதூக்குவதை தடுக்க இயலவில்லை.பொதுவாக  சென்னை மக்களைத் தான்  பிறர்க்கு  மரியாதை தராத கொச்சை பேச்சு என்ற வகையில் தென்  மாவட்ட மக்களும்,மேற்கு மாவட்ட மக்களும் கூறுவர்.நான் பார்த்த வரையில் சென்னை மக்கள் இயல்பானவர்கள்,அவர்கள் கையாளும் மொழி மட்டுமே பிறர் அவர்களைப் பற்றி அவ்வாறு  நினைக்கத் தூண்டுகிறது என்று கருதுகிறேன்.


ஆரல்வாய்மொழி,குழித்துறை முதலான  சிறப்பான தமிழ்ச் சொற்களை  ஊர்ப் பெயர்களாக தாங்கியுள்ள  நாட்டில் பெயர்ப் பலகைகள்,சுவர் வாசகங்களில் ஆங்காங்கே "ர"கத்திற்கு பதிலாக "ற"கரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.அநேகமாக அவர்கள் உச்சரிப்பு போலவே எழுத்திலும் குறிப்பிடுகிறார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் உச்சரிப்பு குறைபாடுகள் நிறைய உண்டு.ஆனால் எழுத்தில் எழுதும்போது சரியாகவே பயன்படுத்துகின்றனர். (தெரிந்தே பிழையாக எழுதுபவர்கள் வேறு வகை).


நாஞ்சில் மக்கள் மீதான விமர்சனங்கள் அல்ல இவை,ஆதங்கம் மட்டுமே. இவை எனது நேரடி அனுபவம் மற்றும் நான் அறிந்த சில நண்பர்களின் கருத்து சார்ந்த பார்வை மட்டுமே. அந்நிலம் சார்ந்தவர்களின் பார்வை அறிந்து கொள்ளப்படும்போது,வாதம் எடுத்து வைக்கப்படும்போது என்னுடைய கருத்தையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது,இல்லையென்றால் எப்போதும் எனக்கு அது ஒரு மனக்குறையாகவே நீடித்துக் கொண்டு இருக்கும்.

Friday, June 10, 2011

தானாய் வீழும் மரம்

நேற்று இந்த வழியில் வண்டியில் சென்றுகொண்டு இருக்கும்போது  நாங்கள் பார்க்க  இந்த மரம் தானாக கீழே வீழ்ந்தது.வழியில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்த கோடாலி கொடுத்து உதவினான் ஒரு நண்பன்.அப்பொழுது "இந்த சத்து பிடிப்பற்ற மரங்களுக்கு கீழே தலைக்கவசம் இல்லாமல் ஒய்வு எடுப்பது கூட ஆபத்தானது" என்று பேசிக்கொண்டு இருந்தோம். தானாய் வீழும் மரமும் கூட மனிதனால் வெட்டப்படாமல் போகாது போல  என்ற எண்ணமும் மனதினில் ஓடிக்கொண்டு இருந்தது.

இன்று காட்டுக்குள் சென்ற அந்த நண்பன் வழிப்பாதைக்காக ஒரு மரத்தை வெட்ட முனைகையில் மற்றொரு மரத்தின் கிளை  முறிந்து தலையில் விழுந்து இறந்து போனான்,தலையைப் பார்க்காமல் வேலையை மட்டும் குறியாக பார்ப்பது தவறு என்ற படிப்பினையும் கொடுத்துக் கொண்டே.

நேற்று கைகொடுத்த கை இன்று இல்லை. 'விதி வலியதோ' என்ற எண்ணம் மேலோங்குகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையும்,அவநம்பிக்கையும் ஒரே சேர மனதில் எழும்பி கண்ணீர் மல்கச் செய்கிறது. 

Monday, June 6, 2011

இடைநிலையில் இருக்கும் ஒரு சாதி

இடைநிலை ஆதிக்க சாதியில் பிறப்பவனுக்கு ஒரு வசதி இருக்கிறது.தன்னை மட்டும் ஆராய்ந்து பார்க்காமல் பார்ப்பனீயத்தை அவர்களின்  கூடவே நின்று கொண்டு பொதுவில்  சாடலாம்,தலித் அரசியலை தூர  நின்று கொண்டு வெறுக்கலாம். ஒரு வகையில் சராசரி இந்தியனும் கூட இப்படித் தான் இருக்கிறான் தம்மைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு வெள்ளைக்காரனைக் கண்டு பொருமுவதும்,கறுப்பனைப் பார்த்து விலகிப் போவதுமாக!

மேற்குறிப்பிட்ட  தட்டையான  ஒரு கோணத்தில் மட்டும் நோக்கினால்  நடுநிலைவாதிகளையும் கூட  இதே நேர்கோட்டில் நிறுத்த முடியும்.ஏனென்றால் நடுநிலையில் இருப்பதாக காட்டிக்கொள்பவனுக்கு ஆட்சியாளர்கள்,அரசியல்வாதிகள்,நடிகர்கள் என எவரையும்  விமர்சிக்கும் வசதி தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது.இது எப்பொழுதும் அடுத்தவனை குறை சொல்லிவிட்டு தமது அறிவிஜீவித்தனத்தை காண்பித்து கொள்வதாகவும் பொதுவில் தென்படும்.சில நேரங்களில் தாம் யார்,எதற்காக பேசுகிறோம் என்பதை கூட சிலர் மறந்து பேசுவது உண்டு. ஆனால் அது மட்டுமே முழுக்க  உண்மையாக இருக்க முடியாது. உதாரணத்துக்கு  நீங்கள்  ஏதாவது ஒரு தரப்பு நியாயங்களை மட்டும் பேச தொடங்கி விட்டால் அதற்குரியவர்கள் தவறே செய்தாலும் நியாயப்படுத்தி  அதுவே சரி என்று வாதிடவும் செய்வீர்கள். இந்தச் சூழலில் 'தாமரை இலையின் மேலே இருக்கும் நீர்' போல் பட்டும் படாமல் இருப்பதை விட மாற்றுக்கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.அதே நேரத்தில் மாற்றுக் கருத்தானது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி,தான் வாதத்தில் வெல்ல வேண்டும்,நடுநிலையாக இருக்கிறேன் பேர்வழி என்பதை விட்டொழித்து விட்டு குறைந்தபட்ச சமூக அக்கறையோடு பொறுப்பான,நேர்மையான,விசாலாமான பார்வையாக இருத்தல் வேண்டும்.

தமிழர்களாகிய  நாம் பொதுவில் எந்த விசயத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சாரார் பக்கம்  சேர்ந்து கொண்டு பேசுவதும்,அதை புறக்கணிப்பவர்கள்,மாற்றுக்கருத்துக்கள் கொண்டவர்கள்  மேல் எதிரிகள்,துரோகிகள் என்று பட்டம் சூட்டுவதும்  நடந்து கொண்டு இருக்கிறது.இது ஏறக்குறைய அமெரிக்கக்காரன் சொல்வது போல் "ஒன்று என்னுடன் சேர்,இல்லையெனில் நீயும் எதிரியை  ஆதரிப்பவன் என்கிற கணக்கில் நீயும் எதிரியே" என்ற அர்த்தத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. .

இன்று தவறாக தெரியும் ஒன்று நாளை சரியாகவும் ஏற்கப்படும். எதுவும் நிரந்தரமற்ற மாறும்,மாறிக்கொண்டே இருக்கும் நிலையற்ற இந்த  உலகில் மாற்றுக் கருத்துக்களை ,நடுநிலைமை கருத்துகளை நாம் ஏன் எப்போதும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும்? 

மாற்றுக்கருத்தை ஏற்று  முகம் கொடுத்து பேச வேண்டாம்,முகத்தை திருப்பிக் கொண்டு கூட போங்கள்,ஆனால் முகத்தில் எச்சிலை மட்டும் காறி உமிழாதீர்கள்.



Friday, June 3, 2011

சீமான் - விஜயலட்சுமி > பெண்கள் ஏன் ஆண்களைப் பிடித்து தொங்குகிறார்கள்?


சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் என்ன நடக்கிறது இது சதியா, இல்லை உண்மையா ? என்று விவாதிப்பதே தேவையற்றது என நான் கருதுகிறேன். முதலில் இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட உறவு நிலை வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

பொதுவில் ஆணும்,பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பித் தான் காதலிக்கின்றனர். பின்பு ஏதோ சில காரணங்களால் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் பிரிகின்றனர்,இல்லை யாரோ ஒருவர் விலகத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம்.இதற்காக என்னை நம்பிக்கை மோசம் செய்து விட்டார்கள் என ஆண் மீது பெண்ணோ,பெண் மீது ஆணோ வழக்கு போடுவது சரியான நிலைப்பாடா? காதலிக்கத் தொடங்கும்போது மட்டும் வக்கீல் வைத்துக் கொண்டா காதலிக்கிறீர்கள்? தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு இருந்தால் அதைப் பற்றி வழக்கு தொடுப்பது நியாயம். அதுவும் கூட இன்றைய காலகட்டத்தில் (காதலிக்கும்போது ஏற்படும்) யாரால்,யார் தூண்டப்பட்டது என்று கூட சொல்ல முடியாது. இதில் போய் காதலித்து ஏமாற்றி விட்டான் என்று வழக்கு தொடர ஆரம்பித்தால் நாட்டில் இனியும் எத்தனை பேர் காவல்துறை,நீதிமன்றத்துக்கு செல்வது?

ஆண்கள் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் காவல்துறையை நாடுவதில்லை. ஒருக்கால் அவன் அங்கு சென்றாலும் அவனுக்கு இழுக்கும்,அவமானமும் கூடும் என்று அஞ்சி செல்லாமல் இருக்க கூடும். பெண்களுக்கும் இப்படி குற்றச்சாட்டுகளுக்காக காவல் துறை,நீதி மன்றங்ககளை நாடிச் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க கூடியது. ஜீவனாம்சத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைமையில் பெண்கள் இன்று இல்லை என்று சொல்லலாம். அப்படி இருக்க .வாழ்க்கை முழுவதும் ஒரு துணை,பாதுகாப்பு வேண்டும் என்று நினைத்து வழக்கு போட்டு இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யும் ஆண்களை இழுத்து வந்து கல்யாணம் கட்டிக்கொண்டு எப்படி காலத்தை கடத்துவார்கள்? ஏன்,எதற்காக இந்த பெண்கள் இப்படிப்பட்ட ஆண்களைப் பிடித்து தொங்குகிறார்கள்?

Wednesday, June 1, 2011

இனி இரவுகளை தொலைப்பதில் அர்த்தமில்லை:)


நான் அவனை காதலிக்கிறேன். எப்போது இருந்து காதலிக்கிறாய் என்று என்னிடம் நீங்கள் கேட்பது குழந்தையிடம் நீ எப்போது பிறந்தாய் என்பதற்கு ஒப்பானது.அவனிடம் என்ன பிடித்தது என்று கூட எனக்கு சொல்லத் தெரியவில்லை.நினைவுள்ள நாள் முதலே அவன் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறான். அவன் படிக்கும் கல்லூரியில் சேர்வதற்காக இன்ஜிரியரிங் சீட் கிடைத்தும் பி.எஸ்.சி. மேக்ஸ் சேர்ந்தேன்.ஒரே ஊராக இருந்தும்,கல்லூரியில் அவன் ஜூனியராக படித்தும் என்னுடைய காதலை மட்டும் இதுவரை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். அவனைப் பார்த்து 6 மாத காலம் ஆகி விட்டது. அவன் தற்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். நாளை நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு வருபவனிடம் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.


விழா நிகழ்ச்சியின் இடையே அப்பாவிடம் வந்த போனை பேசுவதற்காக வாசற்படியை தாண்டி வெளியே வருகையில் ,"மாப்ள, ராஜியைப் பார்த்தியா.எப்படி திமிறிக்கிட்டு நிக்குது. நம்ம சாதியில இருக்கிறவளுக எல்லாம் இல்லாததை இழுத்து தூக்கி வச்சுக்கிட்டு அலையுறாளுக .நீ ஆயிரம் தான் சொல்லு,அவளுகளை மாதிரி நேச்சுரலாக யாருக்கும் இருக்காது." என்று ஒருவன் போதையில் அவனிடம் உளறிக் கொண்டு இருக்கிறான்.அதைக் கேட்டுக்கொண்டு இருக்கும் அவனிடம் ஒரு எதிர்ப்போ, ஆமோதிப்போ இல்லை.எனக்கு அங்கே அப்படியே என்னை அறுத்துக் கொண்டு சாக வேண்டும் போல இருந்தது.


இரவாகி விட்டது,எல்லாம் பசிக்கிறது. "இனி இரவுகளை அவனுக்காக தொலைப்பதில் அர்த்தமில்லை".