Saturday, June 11, 2011

நாஞ்சில் என்னுமொரு நாடு

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே தென்மூலையில் எல்லையாக  அமைந்து இருக்கும் கன்னியாகுமரியை கொண்டுள்ள நாஞ்சில் நாட்டிற்கு நிறைய சிறப்புகள் உண்டு. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி ,திருவள்ளுவர் சிலை,சுசீந்திரம்,திற்பரப்பு அருவி,பேச்சிப்பாறை அணை,பத்மநாபபுரம் அரண்மனை,முட்டம் முதலான பல இடங்கள் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு நாடு. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை,தோழர் ஜீவா,கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்,தோப்பில் முகமது மீரான்,அரசியல்வாதிகள் நாஞ்சில் மனோகரன்,நாஞ்சில் சம்பத் என்று கலை,இலக்கியம்,அரசியல் என்று அனைத்திலும்  முத்திரை  பதித்த,பதிப்பவர்கள் வாழ்ந்த மண் இது. மக்களின் தொடர்ச்சியான உணர்ச்சிகரமான போராட்டங்களின் விளைவாகவே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது என்பது வரலாறு.


மலையாளத்தை  தாய்மொழியாக கொண்ட மக்கள் அதிகமாக வாழும் குமரி  மாவட்டம், "நெல்லை எனக்கு எல்லை,குமரி எனக்கு தொல்லை" என்று கருணாநிதி கூறியது போல  நமது ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகிறது. இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும்,இந்துக்களுக்கும் உறவு அவ்வளவு சுமூகமாக  இல்லாதது தேர்தலில் கூட பிரதிபலிக்கிறது.ஒட்டுமொத்த தமிழகமும் பா.ஜ .க.வை புறக்கணிக்கும் சமயத்திலும் இங்கு அவர்கள் பெருவாரியான வாக்குகள் பெறுகின்றனர்.திராவிடக் கட்சிகளை விட காங்கிரசும்,செங்கொடித் தோழர்களும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது உள்ளூர் சார்ந்த அரசியல் (அ) கேரளா சார்ந்த அரசியல் (அ) தேசிய அரசியல்  சார்ந்த நிலைப்பாடு மட்டுமே இங்கு  பிரதிபலிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.


வெளிநாடுகளிலும்,வெளியூர்களிலும் புலம் பெயர்ந்து  வாழ்பவர்கள் அதிகம். வரதட்சணை அள்ளிக் கொடுக்கப்படும் பகுதியாகவும் விளங்குகிறது. என்னுடைய நண்பர் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக தன் உடன் பிறந்தவர்கள் திருமணத்திற்காக  வெளிநாட்டில் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்.


இவர்கள் பேசும் வட்டார பேச்சு மொழி வழக்கு மலையாளம் போல  தோன்றுகிறது.இதன் பொருட்டு நம்மில் பலர் அவர்களை மலையாளிகள் என்றும் கூட முத்திரை குத்துகின்றனர்.ஆனால் யதார்த்தத்தில் மலையாளிகளை விடவும் பிற மொழி கலப்பின்றி இவர்கள் தான் தமிழும்,மலையாளம் கலந்த  அச்சு அசலான மொழி பேசுகின்றனர்.அதனாலே பலருக்கு புரிவதில்லை என்று நான் கருதுகிறேன்.அவர்களின் பேச்சில் அந்த வட்டாரத்துக்கு உரித்தான மொழி,பண்பாடு,கலாச்சாரம்,சமூகம்,இயல்பு,உள்ளார்ந்த உணர்வு ஆகிய குறியீடுகளைப் பார்க்க முடிவதால் அந்தப் பேச்சு என்னை மிகவும் கவர்கிறது.
 


இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் இங்கு எனக்கு பிடிக்காதவை ,விளங்காதவை சில இருக்கின்றது. நாகர்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடும் பொது இடங்களிலோ, கடைக்கோ,உணவகத்துக்கோ சென்றால் வெளியூர் மனிதனைப்  பொருட்படுத்தாத,மதிக்கப்படாத நிலையை காண முடிகிறது.மற்ற ஊர்களில் போலியாகவாது முகமன் செய்து வரவேற்பார்கள்.இங்கு அதற்கு வாய்ப்பே இல்லை.நல்ல கல்வியறிவு,பொருளாதார வசதி,யாருக்கும் தலை வணங்காத குணம் இவ்வூர் மக்களிடம் அதிகம் உண்டு.அதனால் எவரையும் சட்டை செய்வதில்லையோ என்னவோ?  இதற்கான காரண  காரியங்கள்  வேறு ரூபத்திலும் இருக்கலாம். சில இடங்களில் அவர்களைப் பற்றி பொதுவாக ஏற்படும் குழப்பம் (தமிழனா,மலையாளியா என்ற) அந்த ஊரில் நடமாடும்போது நமக்கே "நாம் யார்?" என்ற கேள்வி எழும்பி நம்மை இயல்பில் இல்லாமல் இருக்கச் செய்து விடுகிறது. சில வேளைகளில்  திருவனந்தபுரம்,கொச்சின் போன்ற ஊர்களே பரவாயில்லை என்ற எண்ணம் தலைதூக்குவதை தடுக்க இயலவில்லை.பொதுவாக  சென்னை மக்களைத் தான்  பிறர்க்கு  மரியாதை தராத கொச்சை பேச்சு என்ற வகையில் தென்  மாவட்ட மக்களும்,மேற்கு மாவட்ட மக்களும் கூறுவர்.நான் பார்த்த வரையில் சென்னை மக்கள் இயல்பானவர்கள்,அவர்கள் கையாளும் மொழி மட்டுமே பிறர் அவர்களைப் பற்றி அவ்வாறு  நினைக்கத் தூண்டுகிறது என்று கருதுகிறேன்.


ஆரல்வாய்மொழி,குழித்துறை முதலான  சிறப்பான தமிழ்ச் சொற்களை  ஊர்ப் பெயர்களாக தாங்கியுள்ள  நாட்டில் பெயர்ப் பலகைகள்,சுவர் வாசகங்களில் ஆங்காங்கே "ர"கத்திற்கு பதிலாக "ற"கரம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.அநேகமாக அவர்கள் உச்சரிப்பு போலவே எழுத்திலும் குறிப்பிடுகிறார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் உச்சரிப்பு குறைபாடுகள் நிறைய உண்டு.ஆனால் எழுத்தில் எழுதும்போது சரியாகவே பயன்படுத்துகின்றனர். (தெரிந்தே பிழையாக எழுதுபவர்கள் வேறு வகை).


நாஞ்சில் மக்கள் மீதான விமர்சனங்கள் அல்ல இவை,ஆதங்கம் மட்டுமே. இவை எனது நேரடி அனுபவம் மற்றும் நான் அறிந்த சில நண்பர்களின் கருத்து சார்ந்த பார்வை மட்டுமே. அந்நிலம் சார்ந்தவர்களின் பார்வை அறிந்து கொள்ளப்படும்போது,வாதம் எடுத்து வைக்கப்படும்போது என்னுடைய கருத்தையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது,இல்லையென்றால் எப்போதும் எனக்கு அது ஒரு மனக்குறையாகவே நீடித்துக் கொண்டு இருக்கும்.

4 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

செம்மலர் செல்வன் said...

நன்றி,அய்யா

பாசிஸ்ட் said...

கன்னியாகுமரி பற்றிய உங்கள் பதிவு மிகச் சரியானப் பார்வையை கொண்டு எழுதப்படுள்ளதாக நினைக்கிறேன். சாதாரணமாகப் புரிந்துகொள்ள உங்கள் பதிவு மிகச் சிறந்தது.

ஆனால் கன்னியாகுமரி பற்றி உங்கள் (செம்மலர் செல்வன்) புரிதல் மேலோட்டமானது அல்ல என்பதால் சில கருத்துகளை நான் சொல்லலாம்(?).

மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் அதிகம் இல்லை. குறைவாக இருக்கிறார்கள். நாஞ்சில் நாடு என்பது தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டங்களைக் கொண்டது. நாகர்கோயிலுக்கு மேற்கே உள்ள அதாவது கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டங்கள் இடைநாடு என்று முன்னர் அழைக்கப்பட்டது. இடை நாட்டு மக்களின் பேச்சு மொழியும், நாஞ்சில் நாட்டு மக்களின் பேச்சு மொழியும் சற்றே வேறுபாடானது. அதாவதுஇடைநாட்டு மக்களே அதிகம் மலையாளம் கலந்த தமிழ் பேசுவார்கள்.

நாகர்கோயில் நகரில் நீங்கள் சொல்லுவது போல கடைக்கோ, உணவகத்துக்கோ சென்றால் பிறரை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கு அதிகமாகவும், ஆனால் மார்த்தாண்டம் நகரத்தில் குறைவாகவும் இருப்பதையும் உணரலாம்.

பிறரைப் பொருட்படுத்தாத மக்களாய் இருந்தாலும் பேசும் போது மரியாதையுடன் தான் பேசுவார்கள். சென்னை மக்களைப் போல வயது அறிந்தாலும் அறியாமலும் வா போ என பேசும் வழக்கம் இல்லை. முதல் பேச்சில் தனக்கு சிறியவரையும் குமரி மாவட்ட பெரியவர்கள் மரியாதையாக அழைப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

மேலும், ற ர எழுத்து சிலர் தெரிந்தே தான் எழுதுகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை போலும்!!!

பதிவிற்கு நாஞ்சில் என்னுமொரு நாடு என்று தலைப்பு இருந்ததால் அதன் உள்ளார்ந்த சில விடயங்கள் பகிரும்படி ஆனது. நன்றி

செம்மலர் செல்வன் said...

உங்களது விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி,பாசிஸ்ட்.

//மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் அதிகம் இல்லை. குறைவாக இருக்கிறார்கள்//

தமிழகத்தின் கோவை,சென்னை,நீலகிரி மாவட்டங்களை விட குமரி மாவட்டத்தில் மலையாளம் பேசும் மக்கள் அதிகம் என குறிப்பிடவே அவ்வாறு எழுதினேன்.

//நாஞ்சில் நாடு என்பது தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டங்களைக் கொண்டது. நாகர்கோயிலுக்கு மேற்கே உள்ள அதாவது கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டங்கள் இடைநாடு என்று முன்னர் அழைக்கப்பட்டது. இடை நாட்டு மக்களின் பேச்சு மொழியும், நாஞ்சில் நாட்டு மக்களின் பேச்சு மொழியும் சற்றே வேறுபாடானது. அதாவதுஇடைநாட்டு மக்களே அதிகம் மலையாளம் கலந்த தமிழ் பேசுவார்கள்.

நாகர்கோயில் நகரில் நீங்கள் சொல்லுவது போல கடைக்கோ, உணவகத்துக்கோ சென்றால் பிறரை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கு அதிகமாகவும், ஆனால் மார்த்தாண்டம் நகரத்தில் குறைவாகவும் இருப்பதையும் உணரலாம்.//

நீங்கள் கூறுவது உண்மை தான். இதை நான் நேரிலும் கண்டு இருக்கிறேன். மேலும் நெல்லை மாவட்டத்தை ஒட்டிய கடல் மற்றும் நிலப்பகுதிகளில் தமிழ்பண்பாட்டு சூழலே நிலவுகிறது என நான் நினைக்கிறேன்.

நேரம் கிடைத்தால் முகநூலில் இந்த குறிப்பை ஒட்டி எழுந்த கருத்துகளைப் பார்க்கவும்.சுட்டி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

http://www.facebook.com/?sk=app_2915120374#!/notes/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/1381360071562