Tuesday, April 26, 2011

மதுரை மாட்டுத்தாவணி - தூத்துக்குடி / வைகோ

வைகோ மற்றும் தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்களின் உணர்ச்சிவசப்படுதலுக்கும்,கோபத்திற்கும் இதுநாள் வரை காரணங்களை தேடிக்கொண்டு இருந்தேன். மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தூத்துக்குடி வரை NH45B சாலையில் பேருந்தில் பயணிக்கும்போது ஓரளவுக்கு அதன் காரணங்களை அறிய முடிந்தது.

முள் காடுகள், பொட்டல் நிலங்கள், ஆங்காங்கே தென்படும் வீடுகள் என
மாட்டுத்தாவணியில் இருந்து தூத்துக்குடி வரை சாலையின் இரு பக்கமும் பார்க்கும் போது பாலைவனத்தில் தான் பயணிக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அவ்வப்போது வீசும் காற்று கூட தகிக்கிறது. தரிசு நிலங்கள் மேம்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. சில இடங்களில் வேப்ப மரங்களை நட்டு வைத்து இருப்பதை காண முடிந்தது.

இந்த மக்களின் வாழ்வாதாரம் என்னவாக இருக்கும்,எப்படி இந்த கரிசல் பூமியில் வாழ்கிறார்கள் என நினைக்கும் போது வியப்போடு வேதனையும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களில் நான்காவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்று இருக்கிறது. இந்த கல்வி அறிவைக் கொண்டு அங்கு பிழைக்க வழி இல்லாமல் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


இலவசம், கவர்ச்சி திட்டங்கள்,விவசாய நிலங்களில் பொருளாதார மண்டலங்கள், சென்னையை மையப்படுத்தியே தொழிற்சாலைகள் கொண்டு வரும் அரசாங்கம் தூத்துக்குடி,விருதுநகர்,ராமநா
தபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பாலைவனம் ஆவதை எப்படி கண்மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை. இதற்கும் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன்,கீதா ஜீவன் என அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்கள் இவை. அனைத்துக்கும் மேலாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வைகோவும் விளாத்திகுளத்தில் தான் இருக்கிறார்.

ஈழத் தமிழர், தமிழ் இனத்துக்காக போராடி இன்று ஒரு மூலையில் ஒடுங்கி இருக்கும் வைகோ தென் மாவட்டங்களை மையப்படுத்தி இங்கு இருக்கும் பிரச்சனைகளை முன் வைத்து அரசியல் செய்தால் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடிக்கலாம்.

சென்னை மாநகரம் வேறு பெருத்துக் கொண்டே போகிறது.
ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திருச்சிக்கு ஏதேனும் செய்ய வாய்ப்பு இருக்கிறது. கோவை,மதுரைக்கு எதுவும் செய்யக் கூடாது என தீர்மானம் எடுத்தவர்கள் போல ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் கர்நாடகாவில் பெல்காமை இரண்டாம் தலைநகராக அறிவித்ததை போல இங்கும் செய்து,சில கட்டமைப்பு வசதிகளை செய்தால் இப்பகுதி மக்கள் பிழைத்துப் போவர்.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,ஏதாவது பண்ணனும் பாஸ்!

10 comments:

Sri said...

Oru vidhathula santhosha padunga....intha valarchi un planned a vandhaal andha valarchi madhiri oru thollayae vaendaam. Chennaila ellam irukku irukku apdingareengalae....vangara sambalam vetti selavukkuthaan pathum. eg : Can water, Travel to work, canteen saappadu, Auto etc., sadharana manushanukku onnum use illa saarae. Adaivida adhigamaa pollution.

Enna kaetta oru side fulla nalla vivasayamum innoru pakkam polluting industriuma irukkuradha paravailla. Mudinja andha pakkam vivasayatha munnetha mudiyumanu paarunga...paavam avangalavadhu noi nodi illama iyarkai kathoda irukkattum

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

இதுநாள் வரை நானும் அறிந்திராத உண்மைகள் நண்பரே .பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

செம்மலர் செல்வன் said...

@ஸ்ரீ - நீங்க சொல்றது சரி தான். நகர வாழ்க்கை மிக கொடுமை தான். திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,தேனி,திண்டுக்கல் மாவட்டங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இருக்கின்றனர். இப்போது நிறைய பஞ்சு, நூற்பாலைகள் வந்து உள்ளன. ஸ்டெர்லைட் மாதிரி தூத்துக்குடில பிரச்சனை இருக்கு. கோவை,திருப்பூர், ஈரோடு,திருச்சி என விவசாயப் பகுதிகள் எல்லாம் இன்று தொழில் மயமாகி விட்டன. இந்த கரிசல் காடுகளில் விவசாயம் செய்யும் அளவுக்கு அரசாங்கம் மான்யம், நில சீரமைப்பு ,ஊக்குவிப்பு செய்தால் நன்றாக இருக்கலாம். அந்த ஊர் காற்றை வாங்குவதற்க்காவது மக்கள் அங்கு இருக்க வேண்டுமே என்பது தான் என் கவலை. அங்கு நிலை நிற்க முடியாமல் சென்னையில் போயி சாக வேண்டி இருக்கிறதே!

செம்மலர் செல்வன் said...

நன்றிங்க,பனித்துளி சங்கர்.

குலவுசனப்பிரியன் said...

என் சொந்த ஊர் அருப்புக்கோட்டையை சுற்றி செல்லும் புறவழிச்சாலையில் போய் இருக்கிறீர்கள். அந்த வரண்ட பூமியில், ஊருக்குள் 30க்கு 40 அடி பழைய வீடு ரூபாய் 32 இலட்சமாம்.
எனக்கு தலை சுற்றுகிறது.

அமெரிக்காவில் நானிருக்கும் இடத்தில் சகல வசதிகளுடன் கூடிய 1500 சதுர அடி அடுக்குமாடி வீடு 50,000 வெள்ளிக்கு கிடைக்கிறது.

நம்நாட்டு அரசியலில் ஊழல் என்றால், பொதுமக்களும் கருப்பு பண விசயத்தில் சளைத்தவர்கள் இல்லை.

அம்மாவை பார்த்துக்கொள்ள, மூன்றுமாதம் ஊரிலிருந்து வேலை செய்ய அனுமதி வாங்கி இருக்கிறேன். அடுத்தமாதம் போகிறேன். அங்கேயே இருந்தாலாவது என்ன நடக்கிறது என்று புரியுமா? தெரியவில்லை.

செம்மலர் செல்வன் said...

தமிழ் நாட்டில பெரும்பாலான நிலம்,வீடு எல்லாம் அரசியல்வாதிகள் கையில தான் இருக்கு.அதுனால அவங்க வைக்கிறது தான் விலை.

குலவுசனப்பிரியன் said...

மக்கள் கொட்டிக்கொடுத்தாவது கணித்துறையில் வெட்டி வேலை அல்லது அரசு வேலை வாங்குவது என்று இருக்கிறார்களே ஒழிய, அறிவியல், நுட்பியல், பொறியியல், கணிதம் (Science, Technology, Engineering, Mathematics - STEM) பயின்று தன்நிரைவாக வாழலாம் என்று நினைப்பதில்லை. நீங்கள் சொல்வதுபோல் அரசு அதற்கான சூழலை ஏற்படுத்தவில்லை.

அமெரிக்காவிலேயே, ”இதெல்லாம் எதற்கு தரகு வேலை செய்தால் போதாதா?” என்று கேட்கிறார்கள்.

உ.ம்: http://science.slashdot.org/story/11/04/25/164228/Why-Science-Is-a-Lousy-Career-Choice

செம்மலர் செல்வன் said...

உண்மை,நம்மள நினைச்சா சிரிப்பா தான் வருது. தரகு வேலை,கணக்கு போடுற வேலை,கூலி வேலை தான் பார்க்கிறோம்.

Rathnavel said...

விவசாயத்திற்கு நல்ல ஊக்கமும், சிறுதொழில் வளர்ச்சிக்கு நல்ல ஊக்கமும் கொடுத்தால் தான் எல்லா ஊர்களிலும் முன்னேற்றம் இருக்கும். இல்லையேல் எல்லாக் கூட்டமும் சென்னையில் தான் போய் குவியும்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

செம்மலர் செல்வன் said...

நீங்கள் சொன்னது போல் தொழில் வளர்ச்சியும்,விவசாயத்தில் முன்னேற்றம் இருந்தால் தான் ஆட்சி அதிகாரமும் பரவலாகும்.மக்களும் வளம் பெறுவர்.

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.