Saturday, April 16, 2011

நாடி ஜோதிடம் / குறி ஜோதிடம்

கடவுள் என்ற வார்த்தையிலே நம்பிக்கை இல்லாதவனாகவும், ஜாதகம்,ஜோதிடம் போன்றவற்றில் இதுவரை ஆர்வம் காட்டாமலும் இருந்து வந்து இருக்கிறேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் நண்பன் ஒருவனுக்கு அவனுடைய தொழில், எதிர்காலம் பார்க்க நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றோம். போன இடத்தில் எனக்கும் நாடி பார்ப்பது என்று முடிவானது.

முதலில் நாடி சோதிடர், என்னுடைய கைரேகையை ஒரு வெள்ளைத் தாளில் பதிக்கச் சொன்னார். "சரி,தம்பி.நீங்க ஒரு பத்து நிமிஷம் இருங்க. நான் ஓலைச்சுவடியை தேடி எடுக்கணும்." என்று கூறிச் சென்றவர் ஒரு முப்பது நிமிடம் கழித்துத் தான் வந்தார்.

"நான் சொல்றதுக்கு சரியா இருந்தா சரி,தப்பா இருந்தா தப்புனு சொல்லுங்க" என்று கூறி விட்டு ஓலைச் சுவடியை எடுத்து மந்திரம் வாசிப்பது போல் வாசித்து ஒவ்வொரு கேள்விகளாக கேட்டார். பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர்,வயது, பிறந்த நாள்,கிழமை என்று நாம் சரி என்று சொல்லும்வரை கூறிக்கொண்டே சென்றார். அந்த ஓலைச் சுவடி கட்டு தீரும் வரை என்னுடையது எதுவும் பொருந்தவில்லை. "சரிங்க. உங்க சுவடி இந்த கட்டுல இல்லை. வேற கட்டு எடுத்து வரேன்.பொறுங்க என்று சொல்லி விட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார். இந்த கட்டிலும் என்னை பற்றிய தகவல்கள் எதுவும் ஒத்து வரவில்லை.நேரம் ஆறரைக்கு மேல் ஆகி விட்டது. என் உடன் வந்தவன், "சில நேரம் ஒரு சில பேருக்கு சுவடி கிடைக்காதுயா. உன்னோட பேரு வேற வித்தியாசமானது. அந்த காலத்துல இருந்து இருக்குமா ,என்னமோ? " என ஏற்கனவே அவநம்பிக்கையில் இருந்த என்னை மேலும் நோக விட்டான்.

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தவர்,2 ,3 சுவடிக்கு அடுத்து என்னுடைய பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர்,ஊர்,வயது என சரியாக வரிசையில் சொல்ல ஆரம்பித்தார். என்னால் 'சரி' என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. ஜோதிடரும் இப்போது நம்பிக்கை வந்தவர் போல "தகவல் சரி தான ,அப்போ பொதுப் பலன் எழுத ஆரம்பித்து விடலாம்" என்று சொல்லிக்கொண்டே உற்சாகமாக நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

அப்போது பொற்கால ஆட்சியின் சாதனையான மின்சாரத் தடை வந்ததால் எழுதுவது தடைபட்டது. நான்,ஜோதிடரிடம்" என் பெயருக்கு ஓலைச் சுவடி இருக்காதுன்னு நினைச்சேன். கிறிஸ்தவ ஆளுகளுக்கு எல்லாம் இருக்குமா? எப்படிங்க இதெல்லாம்?" என்று கேட்டேன்.

"தம்பி. இதெல்லாம் 500 ,1000 வருசங்களுக்கு முன்னர் ஞானிகள் எழுதி வைத்துப் போனது. உங்க பெயர் தமிழ்ப் பெயர் தானே. அதுனால எளிது தான். கிறிஸ்தவ பெயர் என்ன,வெள்ளைக்காரர்களுக்கு எல்லாம் எங்க அண்ணன் பார்க்கிறார். உச்சரிப்பு முறையில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். இங்கு இருந்து நிறைய ஒலைச் சுவடிகளை வெள்ளைக்காரன் எடுத்து போயிட்டான். "வானியல் ஜோதிடம்,அறிவியல் ஜோதிடம்" எல்லாம் இதைப் பார்த்து தான் அவன் ஆராய்ச்சியில இறங்குகிறான். பவர் வரட்டும். உங்க பெயர் சுவடியில இருக்கிறத காட்டுறேன்" என்று சொன்னார். இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே மின்சாரம் வந்து விட்டது.

என்னை கூப்பிட்டு என்னுடைய பெயர்,அப்பா,அம்மா பெயர், ஊர் என என் தகவல்கள் எழுதப்பட்டு இருந்ததை காண்பித்தார். என்னால் அதைப் பார்த்து வாய் பேச முடியாமல் மெய் மறந்து நின்று விட்டேன். பொதுப்பலன் எழுதி விட்டு,அப்படியே திருமண காண்டமும் சேர்த்து எழுதி கொடுங்க என்று கேட்டேன்.

ஒரு அரை மணி நேரம் விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார். எழுதி முடித்து விட்ட பின்னர், "வாசிக்க தொடங்கலாமா?" என்று சொல்லி விட்டு குரு நாதர்,கடவுள் மந்திரங்களை சொல்லி விட்டு பலன்களை படிக்க ஆரம்பித்தார். அவர் கூறிய பொதுப்பலன்கள் எல்லாமே மிகச் சரியாக இருந்தது. திருமண காண்டம் வாசிக்கும் போது , இதுவரை ஏற்பட்ட திருமணத்தடைகளையும், காரணங்களையும் கூறினார். வரப்போகும் பெண்ணை பற்றி அவர் கூறியது தான் மிக ஆச்சரியமாக இருந்தது. பெண் பெயர் எத்தனை எழுத்து,குடும்பம்,உருவம்,சொத்து,குறைகள்,இடம்,ஊர்,மச்சம் என ஒவ்வொன்றாக கூறும் போது என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் கோவையில் படித்து கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் நாங்கள் தங்கி இருந்த விடுதியின் சமையல்காரர்,"செம்மலர்,எப்படி இருக்க" என்று கேட்டு விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் அதுவரை என் வாழ்வில் நடந்தவற்றையும்,குடும்பத்தைப் பற்றியும் ஒன்று விடாமல் கூறினார். இதை பக்கத்தில் இருந்த கேட்டு கொண்டு இருந்த நண்பர்கள் எங்களுக்கும் சொல்லுங்க என்று கேட்டதற்கு "குறி எல்லாம் அப்படி சொல்ல முடியாது. இன்று அவனுக்கு சொல்ல வேணும் என்று எழுதி இருக்கு" சொல்லி அங்கு நிற்காமல் கிளம்பி விட்டார். இதற்கும் நான் அவரிடம் தங்கி இருந்த இரண்டு வருடங்களில் ஒரு நாள் கூட பேசியது இல்லை.


கைரேகையை பார்த்து ஒருவர் பலன் சொல்வதும், பிறந்த நேரம் (ராசி,நட்சத்திரம்) பார்த்து சொல்வதும் எப்படி ஒருவருக்கு பொருந்திப் போகிறது? இந்த ஜோதிடம்,ஜாதகம் எல்லாம் உண்மை தானா? இதை நம்ப ஆரம்பித்தால் அவர்கள் சொல்லும் இறைவனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அப்பொழுது கடவுள் இருக்கிறாரா? அடுத்து நமக்கு என்ன நடக்கும் என நம்மாலே அறிய முடியாத போது சிலர் எதிர்கால பலன்களை கணிப்பது எப்படி?
செவ்வாய் கிரகம் இருக்கிறதை அந்த காலத்திலேயே எப்படி கண்டுபிடித்து இருக்கிறார்கள்?

எதை ந்மபுவது? எதை விடுவது?

8 comments:

ஆனந்தி.. said...

செம்மலர் செல்வன்...பெயர் அழகாய் இருக்கிறது...ம்ம்...எனக்கும் நீங்க சொன்னது ஆச்சர்யமாய் இருக்கு...பெரிதாய் ஜோசியம்,,நாடி ஜோசியம்...ஓலை சுவடியில் எல்லாம் நாட்டம் இல்லை...ஆனால் நீங்க அனுபவத்தில் சொன்ன தகவல்கள் ஆச்சர்யம் தான்....

செம்மலர் செல்வன் said...

ரொம்ப நன்றிங்க,ஆனந்தி.

நானும் இன்னும் அந்த ஆச்சரியத்தில் இருந்து விடுபடவில்லை. ஆனால் ஒரு நாள் பிடிபட்டு விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

Anonymous said...

நண்பரே, ரொம்ப ஆச்சரியப்படாதீங்க. நண்பரின் இந்தத் தளத்தில் நாடி, ஜோதிடம் என எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்.

ramanans.wordpress.com

படிச்சுத் தெளிவாகிக்குங்க.

செம்மலர் செல்வன் said...

நன்றி,நண்பரே.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
ramanans.wordpress.com பதிவுகள் நான்கும் படித்துப் பார்த்தேன்.
ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

செம்மலர் செல்வன் said...

ஆமாங்க அய்யா. எனக்கும் அதே!

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Anonymous said...

அண்ணா தாங்கள் நாடி ஜோதிடம் பார்த்த இடத்தை சொன்னால் நானும் பலன் பெற உதவியாக இருக்கும். குடும்பம் மிகவும் வருமையிலும், சிக்கலிலும் உள்ளது. அருள்கூர்ந்து உதவுங்கள்.

Anonymous said...

அண்ணா தாங்கள் நாடி ஜோதிடம் பார்த்த இடத்தை சொன்னால் நானும் பலன் பெற உதவியாக இருக்கும். குடும்பம் மிகவும் வருமையிலும், சிக்கலிலும் உள்ளது. அருள்கூர்ந்து உதவுங்கள்.