Tuesday, April 6, 2010

காதல் - கல்யாணம்

"ஏம்ப்பா, எந்திரி.மணி ஏழு ஆகப்போகுது. சீக்கிரம் கிளம்பி பள்ளிக்கூடத்துக்கு போகணும்ல." அம்மா எங்கோ தூரத்தில் இருந்து இவனை எழுப்புவது போல இருந்தது.

"இந்த பள்ளிக்கூடம்,பரீட்சை இதெல்லாம் எவன் கண்டுபிடிச்சானோ தெரியல. இந்த அப்பாவும் ஏதாவது சொத்து,கித்து சேர்த்து வச்சு இருந்தாலும் பரவாயில்லை, போஸ்ட்மேனா வேலை பார்த்து,என்னத்த சம்பாரிச்சு கொட்ட முடியும். என்னையும்,தங்கையும் படிக்க வைக்கலாம். அம்மா வீடு நல்ல வசதி தான்.ஆனா அப்பா அரசாங்க உத்தியோகம்ன்னு கட்டிக்கொடுத்து பாவம் அம்மா இங்க தனி ஆளா கஷ்டப்படுறாங்க. அவ,அதான் தங்கச்சி தினமும் திண்டுக்கலுக்கு போய் வர கஷ்டப்படுறானு ஹாஸ்டல்ல போய் சேர்த்து விட்டுட்டார். அம்மா,பாவம் துணி துவைக்க,பாத்திரம் விலக்க,சமையல் செய்ய என எந்நேரமும் நிக்க நேரம் இல்லாமல் இங்க தனி ஆளா வேலை செய்துகிட்டு இருக்காங்க"இவ்வாறு நினைத்து கொண்டே எழுந்தான்.

சரி,இன்று பிசிக்ஸ் பரிட்சை வேறு இருக்கு.பஸ்ட் ரிவிசன் தான்.படிச்சு இருந்தாத் தானே அதைப் பத்தி கவலை எல்லாம்,இதை பத்தி நினச்சுகிட்டு இருந்தா மத்த வேலை எல்லாம் யார் பார்க்கிறது.ஒரு வழியாக கிளம்பி,தோசையை சாப்பிட்டு விட்டு மத்தியானத்துக்கு அம்மா டிபன் பாக்ஸ்சில் போட்டுக் கொடுத்த புளிச்சோறை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டான்.


பஸ் ஸ்டாப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தான்.ராஜாளி பஸ் திண்டுக்கலை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. நல்ல மெல்லிய காற்று வீசியது.இந்த செம்பட்டி எவ்வளவு நல்ல ஊர், ஊரைச் சுற்றிலும் ஒரே பசுமை. நெல் வயல்கள், தென்னந் தோப்புகள், ஆறு,அணைக்கட்டு என முழுமையான ஊர்,.முன்னாடியும் இருந்தோமோ,குஜிலியம்பாறை என்றொரு ஊரில்,ஊரை சுற்றி பாறை.ஆனாலும் இது இவனுக்கு சொந்த ஊர் இல்லையே.


பஸ்ஸில் இருந்த பெண்கள் இவனை கை காட்டி ஏதோ கை காட்டி சிரிப்பது போல இருந்தது. இவன் அதைப் பற்றி சிறிது சலனம் கொள்ளவில்லை.ஆனால் அப்பெண்கள் அணிந்து இருந்த சுடிதாரைப் பார்த்த மாத்திரத்தில் அவள் நினைவு வந்தது.அவள் செல்ல வேண்டிய பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து எட்டே கால் மணிக்கு கிளம்பி விடும்.

மணி இப்போது ஏழே முக்கால் ஆகி விட்டது.மொபசல் பாஸ் ஒன்றில் ஏறி உக்காந்து கொண்டான்."என்னை தாலாட்ட வருவாளோ" என ஹரிஹரனும் இளையராஜாவும் ஆடியோ டேப்பில் பாடிக்கொண்டே வந்தனர்.இடையில் கன்னிவாடி,ஸ்ரீராமபுரம் ஆகிய ஊர்களை தாண்டி வரும்போது நிறைய பெண்கள் ஏறி இறங்கினார்கள்.யார் மீதும் இவன் கவனம் செல்லாமல்,அவள் இங்ஙனம் என்ன செய்து கொண்டு இருப்பாள் என கனவுலகில் மிதந்து கொண்டே வந்தான்.உலகில் அவள் ஒருத்தி மட்டுமே பெண் போலவும்,மற்ற பெண்கள் எல்லாம் அரக்கிகள் போலவும் கருதத் தொடங்கினான்.கண்டக்டர்,'ஒட்டன்சத்திரம் ,ஒட்டன்சத்திரம்' என்று கத்தவும் தான் மாய உலகில் இருந்து நிஜ உலகத்துக்குக் வந்தான்.


பஸ்ஸை விட்டு கீழே இறங்கி எதிர் முனையில் சென்று திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் அருகில் நிற்க தொடங்கினான். இப்போது அவள் வழக்கமாக செல்லும் பஸ் வந்து சேர்ந்து விட்டது. அவளுடைய சோடிகளான வெள்ளச்சி, குறத்தி (பட்ட பெயர் தான்!) நின்று கொண்டு இருந்தார்கள்.இன்னும் அவள் வந்து சேரவில்லை.வெள்ளச்சி (அய்யர் ஆத்து பொண்ணு) இவனை பார்த்து முறைப்பது போல இருந்தது.குறத்தி இவனை பார்த்து நமட்டுச் சிரிப்பை அவளிடம் உதிர்த்தாள்.இப்போது போனால் தான் 9 .15 மணிக்கு பரீட்சைக்கு போக முடியும். பஸ் கிளம்புவது போல இருந்தது, இந்த பஸ்ஸில் ஏறுவதா , வேண்டாமா என யோசித்து கொண்டு இருக்கும் போது தூக்க முடியாமல் ஒரு பையை தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள். அவள் ஏறிய பின்னர் இவனும் அதே வண்டியில் ஏறினான்.

இவன் அவள் பக்கமே பார்வையை செலுத்தி கொண்டு இருந்தான்.எதேச்சையாக இவன் பக்கம் திரும்பி,இவனை கண்டதும் தலையை கவிழ்த்துக்கொண்டு அமைதியானாள்.அது வரை அவளிடம் இருந்து குதூகலம் மறைந்து அவ்விடமே அமைதியானது.

"என்னடா பொண்ணு,இவ.இவள் ஏன் இப்படி இருக்கிறாள்.இவளுக்காக நாமும் ஆறு மாத காலமாக காலையில் செம்பட்டி- ஓட்டன்சத்திரம் -திண்டுக்கல்,அப்புறம் சாயங்காலம் திண்டுக்கல்-ஓட்டன்சத்திரம்-செம்பட்டி,இப்படி நாய் மாதிரி அலையிரமோ.அட்லீஸ்ட் திரும்பி கூடப் பாக்க மாட்டேங்கிறா.ஒரு வேளை நம்ம கருப்பா,மூஞ்சி பூரா பருவா இருக்கிறதால பிடிக்கலையோ" இப்படி பரிட்சை எல்லாம் மறந்து போய் அவள் நினைவில் வந்து கொண்டு இருந்தான்.

மணி இப்போது ஒன்பது ஆகி விட்டு இருந்தது. அவள் படிக்கும் கான்வென்ட் ஸ்கூல் பக்கத்துலயே இருக்கு.இவன் செயின்ட் மாரிஸ் போக வேணுமே,அதனால் அவளைப் பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சு விட்டு ஓடினான்.பேருக்கு பரீட்சைக்கு சென்று கிறுக்கி விட்டு வெளியே வந்தான்.அருணும் இவனுடன் வெளியே வந்தான்.

"என்னடா, பரிட்சை எப்படி எழுதின? என்று கேட்டான். "ஏதோ எழுதி இருக்கேன்டா, சரி வாடா, பஸ் ஸ்டாண்ட் போகலாம்.".
அவனும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தான் வருகிறான்.அவனை இப்படியே சாயங்காலம் வரை நிக்க வைத்து பேசிக் கொண்டு இருந்தால் அவள் வரும் வரை பொழுது ஓடி விடும். அவன் அதற்குள் "எலேய்,வெங்காயம்.நீ அவளைப் பார்த்து,அவளுக்கு காவல் காத்து வீட்டுல விட்டுட்டு வருவதுக்கு எல்லாம் கம்பெனி கொடுக்க முடியாது..டேய்,நம்ம பிளஸ் டூ படிக்கிறோம்டா..இன்னும் ஒரு மாசத்துல பப்ளிக்டா. இது சரி வர மாதிரித் தெரியல. நான் இந்த வாரம் உங்க வீட்டுல வந்து சொல்கிறேன்.அப்போத் தான்டா நீ சரிப்படுவ. "

இவன் அவன் சொல்லுவதை காதில் ஏற்றிக் கொள்ளாமல் அவனை பஸ்ஸில் ஏற்றி விட்டு பஸ் ஸ்டாண்டில் பராக்கு பார்க்கத் தொடங்கினான். 5 மணி வரைக்கும் பொழுதை எப்படி ஓட்டுவது எனத் தெரியாமல் மலைக்கோட்டை வரைக்கும் போய் வரலாம் என முடிவு செய்து நடக்கத் தொடங்கினான்.

அவள் அப்போது இவனை கடந்து செல்வது போல தோன்றியது. 'இது என்ன பிரமை' என நினைத்து கொண்டே அவள் செல்லும் திசை நோக்கி திரும்பி விரைந்தான்.

'அவள் தான், அவளே தான்'. அவள் மட்டும் தனியாக செல்கின்றாள்.இவனைப் பார்த்து,அவளிடம் எதுவும் முக மாறுதல் எதுவும் இல்லை. அவள் ஏறிய பஸ்ஸில் இவனும் ஏறினான். பஸ் கிளம்பிய உடன் ஏதோ பாராயணம் செய்வது போல முனகத் தொடங்கினாள். இவன் அவளுக்கெதிரே இருந்த சீட்டில் அமர்ந்து அவளை ரசிக்கத் தொடங்கினான். அவளும் இவனை அடிக்கடி திரும்பிப் பார்ப்பது போல் இருந்தது. எப்போதும் போல் முறைக்காமலும் ,தலையை கீழே போடாமலும் இருந்தே இவனுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

"என்ன ஆனாலும் சரி,இன்று இவளிடம் தன்னுடைய காதலைச் சொல்லி விடுவது என முடிவு செய்து கொண்டான். அப்படி பேசுவது என்றால் 'என்ன பேசுவது,எப்படி பேசுவது' என மனதுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டு வந்தான்.
அவளை முதன் முதலில் பார்த்த நிகழ்வு,அவனின் ஆசை,விருப்பம்,நேசம்,எதிர்காலம்,குழந்தை என மனசு சிறகடித்துப் பறந்து கொண்டு இருந்தது.


அவள் இப்போது பஸ்ஸை விட்டு கீழே இறங்கி விட்டாள். முன் எப்போதையும் விட நிரம்பவும் அழகாக இருப்பது போல் இருந்தாள்.அவள் வீட்டுக்கு ரயில்வே கேட்டைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். அவளை இவன் பின் தொடருவதைப் பார்த்து எப்போதும் பூனை போல மெதுவாக நடக்கும் அவள் குதிரை போல வேகமாக நடந்து கொண்டு இருந்தாள். இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மனமோ துடித்து கொண்டு இருந்தது இப்போது அவள் ரயில்வே கேட்டை நெருங்கி விட்டாள். பகல் நேரமாக இருப்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

அவளை எப்படி கூப்பிடுவது என தெரியாமல், 'ஏங்க' என அவளை கூப்பிட்டான்(பெயர் கூடத் தெரியாது).அவள் கண்கள் மிரள விழித்துக் கொண்டு, கால்கள் படபடவென அடித்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க நின்றாள். "நான் உன்னை லவ் பண்றேன்" என்று சொல்ல வாய் எடுத்தான். ஆனால் இவனுக்கும் பதட்டத்தில் உதறலெடுத்தது. இருவருக்கு நடுவே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது,அதில் இருந்தவன் இவர்களை முறைத்துக்கொண்டே சென்றான். இந்த இடைவெளியில் அவள் வீட்டுக்கு ஓடி விட்டாள். இவனுக்கு இவன் மீதே கோவம் கோவமாக வந்தது. பேசாமல் ஒரு கவிதை எழுதி லவ் லெட்டர் மாதிரி கொடுத்து இருக்கலாம். ஆனால் இதெல்லாம் இப்படி திடீரென நடக்கிறதே என நொந்து கொண்டு வந்தான். அவள் இதை போய் வீட்டில் சொல்லி விட்டால் எதுவும் பிரச்னை வருமா எனவும் யோசனை வந்தது. இவ்வாறு குழம்பியவாறே செம்பட்டியை சென்று அடைந்தான்.

அதான் பின்னர் பொங்கல் அது, இதுவென்று மூன்று நாட்களாக அவளைப் பின் தொடரவில்லை. அவளை போய்ப் பார்க்கவும் அச்சமாக இருந்தது. எந்த முனையில் இருந்தும் மிரட்டல் வரவில்லை. அதனால் 'பழைய குருடி , கதவை திறடி' கணக்கா காலையில் செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு சென்றான்.ஆனால் அன்று அவள் வரவில்லை. என்ன ஆனது என்று அறிந்து கொள்ள இவன் மனம் துடித்தது. அருணிடம் சொல்லி கேக்க சொல்லலாம் என நினைத்தான். குறத்தி,அப்போது இவனை நோக்கி வந்து "அவளுக்கு காய்ச்சல், ஒரு வாரமா லீவ் போட்டு இருக்கா. இப்படிப்பட்ட நேரத்துல அவ பின்னாடி சுத்தி தொந்தரவு பண்ணாதீங்க" என்று சொன்னாள். இவனுக்கு இப்போது 'அவளுக்கு உடம்பு சரியில்ல' என்பதை விட நம்மால் தான்,அவளுக்கு இப்படி ஆகி விட்டதோ என மனதை போட்டு உடைத்துக் கொண்டான். அன்றில் இருந்து ஒட்டன்சத்திரம் போவதை ஒரு வாரம் தள்ளிப் போடுவது என முடிவு செய்தான்.இவனுக்கு பிரக்டிகல் எக்ஸாம் வேறு நடந்து கொண்டு இருந்தது.

பிரக்டிகல் எக்ஸாம் முடிந்ததும் இன்று அவளைப் பார்த்து விடுவது என முடிவு செய்து கொண்டான்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தான். இன்று அவள் கலர் ட்ரஸில் வந்தாள். அவளுடன் அவள் தங்கையும் வருகிறாள். ஸ்கூல் டே மாதிரி எதுவும் இருக்கலாமென நினைத்துக்கொண்டான். அவள் இன்று மிகவும் மலர்ச்சியாக இருந்தாள். அவள் பஸ்சில் ஏறும்போது "ஹாப்பி பர்த்டே,அக்கா" என்று அவள் ஸ்கூலில் 10ம் வகுப்பு படிக்கும் பெண் ஒருத்தி வாழ்த்து கூறினாள், இவனுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அவள் தங்கச்சி இப்போது பஸ்ஸை விட்டு இறங்கி 'நான் ஹாஸ்டலுக்கு போறேன்க்கா, அப்பாவை இந்த வாரம் என்னைய பார்க்க வரச் சொல்லுக்கா' என்று கூறி விட்டு சென்றாள்.

இன்று அவளிடம் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது போல சொல்லி மன்னிப்பு கேட்டு விடலாம் என தீர்மானம் எடுத்தான்.சென்ற முறை போல இந்த முறை பயம் கொள்ளாமல் பஸ்ஸை விட்டு இறங்கிய இடத்திலே சொல்லி விடுவது என நினைத்துக்கொண்டே பஸ்ஸை விட்டு இறங்கினான். அப்போது அவளை நோக்கி இன்னொரு பெரிய உருவமும் வந்தது. இந்த ஆளை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என நினைத்து கொண்டே அவளை நோக்கி முன்னேறினான். " என்னப்பா தம்பி,உனக்கு என்ன வேணும்.சரி,என் கூட வா." அந்த ஆளின் தோற்றத்தைப் பார்த்து இவனால் மறுத்து எதுவும் பேச முடியாமல் அவருடன் வண்டியில் ஏறினான்.

பழனி சாலையில் அவனை கூட்டிச் சென்று,"தம்பி,வாங்க.உங்களைத் தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். இங்க பாருங்க.நீங்க செய்றது கொஞ்சம் கூட சரி இல்ல.பாப்பா ரொம்ப பயப்படுறா.சரியாய் படிக்க முடியல,அவளால. வீட்டுக்கு வந்த பின்னாடி அவ அம்மா கிட்ட அழுகிற. நானும் உங்க வயசை தாண்டி வந்தவன் தான்,தம்பி. இன்னமும் வயசு இருக்கு உங்களுக்கு எல்லாம் . நல்லாப் படிச்சு முன்னேறுங்க. அருண் கிட்ட கேட்டேன். உங்க குடும்பத்தை பத்திச் சொன்னான்.நீங்க பிள்ளைமார்,நாங்க கவுண்டர். இது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. சரி,உன்கிட்ட அதெல்லாம் எதுக்கு. இனிமேல் இந்த வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் .எனக்கு என் பொண்ணு நிம்மதி தான் முக்கியம்." என்று சொல்லி விட்டு இவனை வந்து பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார். இவன் அவரிடத்தில் ஒன்றும் பேசாமல் தலையை குனிந்து கொண்டு இருந்தான். அவள் அது வரை அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். இவனை பரிதாபமாக பார்ப்பது போல இருந்தது. அந்த ஆள் அவளை ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார்.

இவன் இப்போது இந்த உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பது போல இருந்தது. இவளை பார்க்கும் வரை தான் எவ்வாறு இருந்தோம். வீட்டில் இவனை பற்றி எவ்வளவு கனவுக்கோட்டை கட்டி வைத்து இருக்கிறார்கள். இவனுக்கு பின்னர் தங்கை வேறு இருக்கிறாள்.இதெல்லாம் விட , எல்லாரும் இவனுக்கு அறிவுரை சொல்லுவது போல் பட்டது.சரி,இன்றோடு இவளை மறந்து தொலைத்து விடலாம் என எண்ணினான்.கடைசியாக அவளை ஒரு முறை பார்த்து விட்டு போகலாம்,இனிமேல் இந்த திசை பக்கம் கால் வைக்க வேண்டாம்..இரவு பத்து மணி வரைக்கும் அவள் வீட்டை சுற்றி வட்டம் இட்டு வந்தும் அவளை பார்க்கவே முடியவே இல்லை. 10 .30 மணி வாக்கில் அவள் சத்தம் கேட்டு பார்த்தான். அந்த கணத்தில் யார் வெளியே என அவளும் இவனை பார்த்துக்கொண்டு உள்ளே போய் விட்டாள்.

இவனும் மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் வந்த திசை நோக்கி நடந்தான்.ரயில்வே கேட் சிக்னல் போட்டு இருந்தது.கேட் திறக்கும் வரை காத்து இருக்க வேண்டுமே என நினைத்துக் கொண்டு இருந்தான்.வயிறு வலிக்கத் தொடங்கியது.ஏதாவது சாப்பிட வேண்டும் போலிருந்தது. பசி மயக்கத்திலும், சற்று முன் நடைபெற்ற சம்பவங்களாலும் கேட் திறந்தவுடன் எதிரில் வரும் வண்டி கூட தெரியாமல் லாரியின் முன் போய் விழுந்தான். அந்த இடத்திலேயே லாரி அவனை காவு வாங்கி விட்டது.

மறுநாள் காலை அவள் ரயில்வே கேட்டை தாண்டி சென்றாள்..மக்கள் கூட்டமாக நிற்பதும்,போலீஸ் வண்டி இருப்பதும் தெரிந்தது. என்ன என்று போய் பார்க்க நேரம் இல்லை. பள்ளிக்குச் சென்று விட்டாள். ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் முடிந்து பஸ் ஸ்டாண்ட் வந்து சேர நேரம் ஆகிவிட்டது. இன்று வீட்டுக்கு சித்தி வருகிறார்கள்.சீக்கிரம் போக வேண்டும் என நினைத்துக்கொண்டு வெள்ளச்சியும்,குறத்தி வரும் வரை பொறுக்காமல் கிளம்பி விட்டாள். பஸ்ஸை ஏற போக முன் ஒருவன் மறித்து, "நீ எல்லாம் நல்லா இருப்பியாடி,என்னடி பண்ணினீங்க அவனை "என்றான். அவன் யார் என்பது அவளுக்குத் தெரியும்.அவள் பின்னாடி சுற்றுபவனின் நண்பன் என. இவள் இப்போது ஒன்றும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

"அவன் செத்து போயிட்டான்,தெரியுமாடி.நீயும்,உங்க அப்பாவும் என்ன பண்ணினீங்க அவனை,அடிச்சு கொன்னு ரோட்டுல போட்டுட்டீங்களா,பொட்டைகளா . பிடிக்கலைனா சொல்லி தொலைக்க வேண்டியது தானே? இப்போ அவன் உயிர் அநியாமா போச்சே. அவன் குடும்பத்தை யார் காப்பாத்துவா இனிமேல். நீயெல்லாம் ஒரு பொண்ணு? " தூ எனத் துப்பினான்.

இவளுக்கு இப்போது தான் காலையில் ரயில்வே கேட்டில் கூடி இருந்த கூட்டம் எதற்கு என புரிந்தது.சட்டென இவள் உறுதி தளர்ந்தது.ஆனாலும் தனது அப்பா இவ்வாறு ஒன்றும் செய்து இருக்க மாட்டாள் என நம்பினாள்.

முன்னர் இருந்த கோபம் குறைந்து "எங்க அப்பா ஒண்ணும் செய்து இருக்க மாட்டார்.சும்மா கூட்டிட்டு போய் அட்வைஸ் பண்ணி இருக்கார்,அவ்ளோ தான். தயவு செய்து நம்புங்க. நாங்க ஒரு தப்பும் ஒண்ணும் செய்யல" என்று தணிந்த குரலில் உடைந்து போய் பேசினாள்.

தனக்கு முன்னர் ஒரு பெண் மன்னிப்பு கேட்கும் பாவனையில் பேசுவதைக் கண்டதும் அவன் மனம் இரங்கியது.
'சரி ,அவன் வீட்டில இதைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லல. ஆனாலும் என் மனசு ஆற மாட்டேங்குது. அவன் உன்னை எப்படி எல்லாம் லவ் பண்ணினான் தெரியுமா? அவன் எந்த அளவுக்கு நல்லவன் ,உனக்குத் தெரியுமா?

'சரிங்க,என்னை மன்னிச்சிடுங்க. நான் இப்போ வீட்டுக்கு போகணும்.அப்புறம் பேசலாம்' என்று அருணிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.அன்று இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை.தன்னுடைய அப்பா,அம்மா மீதே கோபம் வந்தது.ஆனால் நடந்ததைப் பற்றி எதையும் கேட்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு விஷயம் தெரிந்து இருக்கும்.

அதன் பின்னர் இவளுக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. அருணிடம், 'இறந்து போனவன் எந்த அளவுக்கு இவனை நேசித்தான்' எனக் கேட்டு இருப்பதிலே பொழுதைச் செலவழித்தாள். பரிட்சை எல்லாம் முடிந்த பின்னர் அருணிடம் பேசுவது அதிகம் ஆயிற்று.ஒரு முறை இறந்தவனின் வீட்டுக்கு அருணுடன் சென்று வந்தாள்.இறந்தவனின் தங்கையை அடிக்கடி பார்த்துப் பேசி அவளை சகஜ நிலைமைக்குக் கொண்டு வர முயற்சித்தாள். அருண் இவள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது அவளின் அக்கம் பக்க வீடுகளில் விவாதப் பொருளாகியது. அவள் எதையும் கண்டுகொள்ளும் நிலைமையில் இல்லை. அருண் வராமல் இருந்தால் அவனை கடிந்து கொள்வதுமாக அவள் ஒரு விசித்திர நிலைமைக்கு ஆளாகி விட்டு இருந்தாள். அப்பா,அம்மா அவளுக்கு எதை சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இல்லை.. செய்யக் கூடாத பாவம் ஒன்றை செய்து விட்டதை போலவும், அதற்கு பிரயச்சிதமாக தான் இப்போது நடந்து கொள்வதாகவும் அவள் காட்டிக் கொண்டாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடைய அம்மா, " அருண் ,யாருனு எவரும் கேட்டா நான் என்னாடி சொல்றது. உன் நண்பன்னு சொல்றதா, இல்ல காதலன்னு சொல்றதா ,இல்ல புருஷன்னு சொல்றதா.காலேஜ்க்கு எங்கேயும் படிக்க போகாமல் ,கல்யாணமும் வேணாம்னு சொல்லிக்கிட்டு,என்ன நினைப்புல இருக்க நீ . சொல்லு,நான் தெரிஞ்சுக்கலாம்னு பார்க்கிறேன் " என்று கடுமையாக கேட்டாள்.

அதே வேகத்தில் இவளும் "அருண்,என்னோட புருஷன் தான். போய் உன் புருஷன் கிட்டயும் சொல்லு. ஊரெல்லாம் போய் சொல்லு".

ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டோம் ,ஏன் அப்படி பேசினோம் என்று நினைக்கத் தொடங்கினாள். இவளை பற்றி அறிந்தவன் இப்போதைக்கு அருண் மட்டுமே. அவனை கட்டுவதால் தப்பு ஒன்றும் இல்ல. சரி,நம்ம மனசு மாறுவதற்கு முன்னால் அவனை சரிப்படுத்தி உடனே செய்து விட வேண்டும் என உறுதி பூண்டு உறங்கச் சென்றாள்.

அடுத்த நாள் இருவருக்கும் ஒரு கோயில் திருமணம் நடந்தது. இருவர் வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை,செம்பட்டியில் இறந்தவனின் வீட்டில் தான் இருக்க வேண்டியாதாயிற்று.

2 comments:

Shiva said...

Aduthavan figure-a correct panrathellam, oru polappa...!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in