Friday, July 14, 2017

பின்னிரவின் பிதற்றல்

இவ்வுலகில் உயிருடன் வாழ்வதே பெரும்போதையாகத்தான் இருக்கிறது, அன்பே. "காதலிக்கிறவன் காதலிக்கப்படுவான்", "தேடுகிறவன் கண்டடைவான்" என்பதெல்லாம் வெறும் நம்பிக்கையூட்டும் சொற்களேயன்றி அதில் உண்மைத் தன்மை குறைவென்று காலம் எனக்கு கற்பித்துக் கொடுக்கின்றது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், உன் மேல் அன்றிருந்த காதல்,இல்லவே இல்லாத காமமென்று பித்தனாகி அலைந்து திரிந்த நாட்களெல்லாம் கடல் தாண்டிப் போய் விட்டது. ஆனால் இன்றும் கூட உனது சங்கு கழுத்தை பார்த்து விட்டு நகர்ந்திட நீ இசைவாய் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.'குடுவைத் தாவரம்' என்று உனக்கொரு பெயர் நான் வைத்திருந்தது தெரியுமா!

கடலில் பெய்த மழையை இனம் காண முடியாமல் போவதற்கும் உன்மீதான எனது காதலுக்கும் பேதம் வேறில்லை. அஃதே பிடி நழுவிப் போன மாட்டை விரட்டிப் பிடிக்கப் போகிற இயல்புமில்லை எனக்கு. திருச்செந்தூர் வரை சென்று கடலைப் பார்த்து விட்டு முருகனை காணாமல் வந்ததவன்தான் நான்.

உதிர்ந்து போன மயிர்களைப் பற்றிய கிண்டலும்,கேலியுமாக உரையாடல் நீண்டு கொண்டு இருந்த அச்சமயத்தில்தான் இதுநாள்வரை இறந்து போனவர்களின் கணக்கெடுப்பைத் தொடங்கி இருந்தேன். ஒருவர் சாகப் போகிறார் அல்லது செத்து விட்டாரென்றால் அவரைப் பற்றிய மோசமான அபிப்ராயத்தையும்,தனக்கு இழைத்த துன்பங்களை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து அவர்களை தனது நினைவில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வது வழக்கமாகிப் போனது. இதனால் எழுந்த வெறுப்புகளை விழுங்கி  விழுங்கி உள்ளுக்குள்ளே நஞ்சாகும் அளவுக்கு பயத்தை ஏற்படுத்தி இருந்தது. தனக்கு ஆகாதவனாக இருந்தாலும் கூட அவர்களுடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இயங்கும் மூளையை வேறிடமா மாற்றி வைத்துக்கொள்ள முடியும்?

நீ இறந்த மறுநாளை தேடிச் செல்கிற எனது பின்னோக்கிய பயணத்தில் உறையாமல் என்னிடமே விஷமாய் தங்கி இருக்கிற முத்தங்களையும் புதைப்பதாக தான் திட்டம். இறந்து போன காதலிக்கான உறையாத, உறைந்து போகாத முத்தங்களை சேகரித்து வைத்து இருப்பவனிடம் இவ்வுலகம் அழியப் போகிறது என்ற உங்களது பிலாக்கணங்களை அள்ளித் தெளிக்காமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். காலத்தால் விலகியது காதலா,கனவா என்ற குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பவனிடம் உங்களது பிள்ளை,குட்டிப் பெருமைகளை பறை சாற்றாமல் இருங்கள். திடமற்ற இந்த மனதை நொறுக்குவதற்கு நீங்கள் செலவு செய்யும் ஆற்றல் எல்லாம் வீணாய்ப் போகும், முடிவில் அது தோல்வியில் போய் முடியும்.

எங்கும் இருக்கிறதாக கூறப்படுகிற கடவுளை நாம் எங்கெங்கோ அலைந்து திரிந்து தேடிக்கொண்டு இருக்க சாத்தானோ நேரடியாக நமது வீட்டு வாசல்படிக்கே வந்து விடுகிறார்கள்.

இழந்து போனவைகளை விடவும் பெற்றது அதிகம் என்றும் மனம் எனக்கே சமாதானம் சொல்லிக் கொள்கிறது.

அடைய இயலாத நிறைவு எனது மரணத்தில் வாய்க்கட்டும், ஆமென்.