Monday, July 4, 2011

யாராய் இருப்பாள் அவள் !

இரைச்சலுடன் வந்து நின்ற அரசுப் பேருந்தில் கூட்டம் குறைவாக இருப்பது போல் தென்படவும் பின் வாசலில் ஏறி காலி இருக்கையைத் தேடி முன்னே நகர்ந்து கொண்டு இருந்தேன். "எங்க போறீங்க,டிக்கட்டை எடுத்திட்டு முன்னாடி போங்க"  என்ற கண்டக்டரிடம் சீட்டை வாங்கி கொள்ளும்போது சிட்கோ கேட் வந்து விட்டது. ட்ரைவருக்கு பின் புறம் இருந்த  மூன்று பேரும் அமரும் சீட்டில் ஒரு பெண் மட்டுமே அமர்ந்து இருந்தாள். கண்டக்டரிடம் சொல்லச் சொல்லி மாறி உக்காரச் வைக்கலாம் என நினைத்தால் ஆள் கடைசி சீட்டுக்குச் சென்று பணத்தை எண்ணத்  தொடங்கி இருந்தார். எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இருந்தாலும் ஆபத்துக்கு  பாவம்  இல்லை  என்ற கணக்கில் "ஏங்க,கொஞ்சம் மாறி உக்கார முடியுமா? " என்றேன்."பரவாயில்லை,நீங்களும்  இங்கேயே  உக்காருங்க " என்று சொல்லி விட்டு சன்னலோரத்துக்கு  அவள் மாறினாள்.சார்ஜ் இல்லாத மொபைல்,பண்பலை வானொலி,விஜய் படம்,புத்தகம் இப்படி எதுவும் இல்லாமல்  மதிய நேர  புழுக்கம் வேறு சேர்ந்து கொண்டு பெரும் அவஸ்தையாக இருந்தது.நம்மை மதித்து அருகில் அமர வைத்து இருக்கிறாள் என்ற எண்ணத்தில் சைட் கூட அடிக்கத் தோன்றாமல் முன்னோக்கி பார்த்துக் கொண்டே இருந்தேன். யாராவது பொள்ளாச்சியில் இறங்கினால் சன்னலோரமாக இருக்கிற வேறு ஒரு சீட்டுக்கு மாற வேண்டும்.


யார் கெட்ட  நேரமோ பொள்ளாச்சியில் ஒருத்தரும் இறங்கும் பாட்டைக் காணோம்,வெளியில் நிற்கும் மக்களும் தனியார் பஸ்சுக்கு காத்துக் கொண்டு தான் நிற்கின்றனர்.இப்போது காற்றுக்காகவும்,கண் வறட்சிக்காகவும் கண்ணை அவள் இருக்கும் பக்கம் திருப்ப வேண்டி வந்தது. அவள் சில புத்தகங்களுக்கு மேலாக  கைபேசியை வைத்து விளையாடி கொண்டு இருக்கிறாள்.கல்லூரியில் படிக்கிற பாவனையில் இருந்தாள். விடுதியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு செல்பவளாக இருக்கக் கூடும். அவசியமற்ற இவைகளை விட அவள் என் கண்களுக்கு மிகவும் அழகாக தோன்றினாள்.உடுமலைபேட்டைக்கு செல்லும் முன் இடையில் அங்கங்கு நிறுத்திய இடங்களில் வயதான பெண்கள் ஏறினர். அவர்களும் நாங்கள் காதலர்களோ என்ற எண்ணத்தில் தொந்தரவு செய்யவில்லை.நானும் எந்திரிக்க முயற்சி செய்யாவிட்டாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டு இருந்தது.உடுமலைபேட்டை அடையும் முன் அவ்வப்போது அவள் என்னை பார்ப்பது போல் ஒரு  குறுகுறுப்பு இருந்தது.எனக்கும் 'நீங்க யாரு,என்னா பண்றீங்க' என்று கேக்க வேண்டும் எண்ணம் இருந்தது. குறைந்தபட்சம் நன்றியையாவது தெரிவிக்க வேண்டும் என்ற உந்தல் இருந்து வந்தது.

பஸ் உடுமலைபேட்டையை வந்து சேர்ந்து விட்டது.கடைசி சீட்டில் மட்டும் ஒரு ஆள் எழுவதும் அந்த இடத்திற்கு இரண்டு பேர் சண்டை போடுவதும் தெரிந்தது.வண்டியில் இப்போது ஏறிய ஆட்கள் வந்து அருகில் நிற்கின்றனர். நான் எந்திரித்து வழி விடுவது நலம் என எந்திரிக்க எத்தனித்தேன்.

"செம்மலர் நீங்க ஏன் .. ,நீங்க என் பக்கமா வந்து உக்காருங்க.யாரும் வந்தா அந்த பக்கம் உக்காரட்டும்."


இப்பொழுது அந்தப் பொண்ணை முழுவதுமாக உற்றுப் பார்த்தேன்.இவளை இதற்கு முன் எங்கும் பார்த்து,பேசிய பரிச்சயம் இல்லையே,அப்புறம்  எப்படி இவளுக்கு என் பெயர் தெரிந்தது?


"இல்லமா,நான் இங்க ஒரு பிரண்டைப் பார்க்கணும்,அப்புறம் பார்ப்போம்" என்று சொல்லி விட்டு ஓடும் பஸ்சில் இருந்து குதிக்க வேண்டியதாகப்  போயிற்று. யாராய் இருப்பாள் அவள் ! 

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படியெல்ல அனுபவங்கள் வருதுபாருங்க....

செம்மலர் செல்வன் said...

ஆமாங்க,கவிதை வீதி சௌந்தர் ! கருத்துக்கு மிக்க நன்றி :)

குணசேகரன்... said...

கடைசியில் கண்டுபுடிச்சீங்களா?
என்னோட வலைப்பக்கமும் கொஞ்சம் வந்திட்டு போங்க பாஸ்..

செம்மலர் செல்வன் said...

இல்லை,பாஸ்.. இன்னும் கண்டுபிடிக்கலை.

உங்க வலைப்பக்கம் இப்போ வந்திட்டேன் :)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
யோசியுங்கள்.

செம்மலர் செல்வன் said...

நன்றி,அய்யா!