Friday, March 11, 2011

அக்காலத்தில்...

டீச்சர்,"பிள்ளைகளா,கிஷோர் கணக்குல நூத்துக்கு நூறு மார்க் வாங்கி இருக்கான்,எல்லாரும் அவனுக்கு கை தட்டுங்க". கிஷோர் மிகவும் சந்தோசமாகப் போயி பேப்பரை வாங்கினான்.

"முரளி, முரளி .. ம்ம். முப்பது மார்க் தான் வாங்கி இருக்க. மாடு மாதிரி வளந்து இருக்கியே, பாஸ் மார்க் கூட வாங்கல. இப்படியே படிச்சா இந்த வருஷம் பெயில் தான். கிஷோர் உன் பக்கத்து வீடு தானா? அவன் எப்படி படிச்சு மார்க் வாங்குறான். அவன் மூத்திரத்தை வாங்கிக் குடி.அப்போயாவது உன் மரமண்டையில ஏறுதானு பார்ப்போம்".

டீச்சர் பேசியதைக் கேட்டதும் கிஷோருக்கு மிகவும் சங்கடமாகப் போயி விட்டது.

முரளி தான் அவனோட பெஸ்ட் பிரண்ட். அவங்க வீட்டுல ஒரே பையன். அளவுக்கும் அதிகப்படியான செல்லம். எப்படினா பத்து வயசு ஆகியும் பால் குடி மாறாப் பையன். இன்னும் அவனுக்கு தாய்ப் பால் கொடுத்து வராங்க. ரொம்ப நேரம் உக்காந்து படிச்சா கண்ணு கேட்டு போகும்னு அவங்க வீட்டுல பயப்படுற ஆளுக. இந்த கருமம் படிப்பு,ஏறித் தொலைய மாட்டேங்குது. அதுக்கு அவன் என்ன பண்ணுவான்,பாவம்.

ஒரு தடவை அவனை டீச்சர் ஸ்கூல் நேரத்துல டீக்கடையில போயி காபி வாங்கி வரச் சொன்னாங்க. அதை கடையில வாங்கப் போகும்போது அவனோட மாமன் பார்த்திட்டு, வீட்டுல சொன்னதுக்குப் அப்புறம் அவனோட அம்மா,சின்னம்மா, அம்மாச்சி எல்லாரும் வந்து பள்ளிக்கூடத்துல வந்து ஆடின ஆட்டத்துல டீச்சர் பேயறைஞ்ச மாதிரி ஆகிட்டாங்க . அதுனால பயலுக, டீச்சர்க என யாரும் அவன்கிட்ட வாய் கொடுக்க மாட்டாங்க.

சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது, "டே கிஷோரு, எப்படிடா நீ பஸ்ட் மார்க் வாங்குற, எனக்கும் சொல்லுடா". என்று முரளி கேட்டான்.

"முரளி , நான் தினமும் மூத்திரம் குடிக்கிறேன்டா.அதுனால தான் நான் நல்லா மார்க் வாங்குறேன்".

"உனக்கு யாருடா சொன்னது, இப்படி மூத்திரம் குடிச்சா படிப்பு வரும்னு".

"நம்ம இந்தியாவோட முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், தினமும் குடிப்பாராம்டா. நேத்து நான் பேப்பர்ல படிச்சேன். இன்னிக்கி கூட நம்ம டீச்சர் உன்கிட்ட சொன்னாங்க,பார்த்தியா?" .

பாடத்தை நடத்தும் போது நல்லா புரிஞ்சு படிக்கணும்டா. அப்போ தான்டா நல்லா மார்க் வாங்க முடியும் என்று சொன்னால கேக்கும் ரகமல்ல அவன். ஆகையால் கிண்டலுக்கு இப்படிச் சொல்லி விட்டான்.

சாயங்காலம் ஒரு ஆறு மணி இருக்கும் யாரோ அம்மாவைக் கூப்பிடுவது போல இருந்தது.
"அக்கா, உன் மகன் செஞ்ச காரியத்தை பார்த்தியா? " .
"என்னடா செஞ்ச, கிஷோர்?". வெளியே பார்த்தால் முரளி அம்மா நிக்குது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை,அதனால் பதிலே பேசாமல் இருந்தான்.

"முரளி பள்ளிக்கூடம் முடிச்சு வீட்டுக்கு வந்த பின்னாடி அவனுக்கு காபி போட்டு குடிக்க குடுத்தேன்க்கா. அவன் அதை குடிக்க மாட்டேன்னு சொல்லி அவன் கையில வச்சு இருந்த எதையோ எடுத்து குடிக்கிறான். அது என்னடானு கேட்டா, அது அவன் மூத்திரமாம்,அதை குடிச்சா நல்லா படிப்பு வரும்னு கிஷோர் சொன்னான்மா. உனக்காவது இன்னொரு பையன் இருக்கான். நாங்களே ஒண்ணே ,ஒண்ணு கண்ணே கண்ணுனு வளக்கிறோம். உன் மகன் இப்படி கூத்துலாம் பண்ணலாமா?."

இதைக் கேட்ட கிஷோர் அம்மாவுக்கு கோபம் வந்து,விளக்குமாறை தூக்கிக் கொண்டு அடிக்க வருவது தெரிந்தது.

அம்மா வேற வைய்யும்,அடிக்கும் ! முரளி வீட்டு படை வேற அடுத்து வருமோ? யார் கையிலும் சிக்கக் கூடாது. இப்படி கிஷோருக்குப் பயம் அதிகமாகி வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் வழியில் முரளி அம்மாச்சி கையில் வசமாக அகப்பட்டுக் கொண்டான்.

"எலேய்,கருவாயா! ஏன் பேரனை மூத்திரமா குடிக்க சொன்ன? வா, உன் குஞ்சை அறுத்து காக்காவுக்கு போடுறேன்" என்று சொல்லி முரளி வீட்டுக்கு உள்ளே இழுத்துக் கொண்டே போனது.

"கிஷோர், நீ குடிடா மூத்திரத்தை முதலில்" என்று சொல்லிக் கொண்டே ஒரு டம்ளரைக் எடுத்து வந்தது கிழவி.

'என்னடா,நம்ம சொன்னது நமக்கே வினையாகிடிச்சு' என்று நினைச்சுக்கொண்டே வாங்கினால், அது காபியாக இருந்தது.

'அப்பாடா,தப்பிச்சோம்னு' அதைக் குடிச்சு விட்டு கீழே மூத்திரம் இருந்த டம்ளரை ஒரு எத்து விட்டு இருவரும் வெளியே கிட்டி விளையாட ஓடி விட்டனர்.

No comments: