Monday, January 24, 2011

திரை வெளிச்சத்தில்,மக்கள் இருட்டில் (தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை)

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி விட்டது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் 'பிரதமர்', "நிழல் பிரதமர்" களுக்கு கடுதாசி, தந்தி இப்படி எழுதியே காலத்தை ஓட்டுகிறார் முதல்வர் . நாட்டை பாருங்கய்யானு சொன்னா இளைஞன் மாதிரி மொக்கைப் படத்துக்கு கதை,வசனம் எழுதுகிறார். மத்த நேரத்துல 'மானாட மயிலாட' , 'நடிகர்,நடிகை பஞ்சாயத்து' , குடும்ப தகராறுகள்,அவரா 'கேள்வி,பதில்' ,முரசொலிக்கு தலையங்கம், இத்யாதி,இத்யாதி... அவருக்காவது வயசு ஆகிடிச்சி.அவர் தொல்லை ரொம்ப நாளைக்கு இருக்காது (இப்படி தான் நெறைய பேரு நினைச்சுகிட்டே இருக்காங்க,ஆனா ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. அவர்கிட்ட யார் பாச்சாவும் பலிக்க மாட்டேங்குது!)
அண்ணா, கருணாநிதி, எம். ஜி.ஆர், ஜெயலிதா எனத் தொடரும் இந்த பாரம்பரியம் விஜயகாந்த், சரத் குமார், கார்த்திக் வரை நீளுகிறது. இருக்கிற இம்சைகள் பத்தாம 'தளபதி','தலை' எல்லாம் இதோ வரோம்,வரோம்னு பூச்சாண்டி காட்டுறாங்க. இந்த ரெண்டு பேரும் தனுஷ்,சிம்பு மாதிரி பசங்க நடிப்பைப் பார்த்து ஒழுங்கா பேசி நடிச்சாலே தமிழ்நாடு பிழைக்கும்.


திரைத்துறையில இருந்து வருபவர்கள் தான்
இப்படி என்றால் , படிச்ச அறிவாளிகளான ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ,பச்சமுத்து ஆகிய எல்லாரும் சாதியைத் தாண்டி வெளியே வர முடிவதில்லை. இந்த வகையில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பரவாயில்லை,சாதிப் பெயரைச் சொல்லியே கட்சியை நடத்துகின்றனர். வைகோ எந்த விசயத்திலும் உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச கூட்டத்தையும் இழக்கிறார்.

ரஜினி முன்னாடி சொன்ன மாதிரி "இந்த கூட்டம் இருக்கிற வரை இந்த தமிழ் நாட்டை ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது" என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நல்ல வேளை, அரசியலில் நுழையாமல் அவர் பிழைப்பு நன்றாக போயிக் கொண்டு இருக்கிறது.
(நாமும் தப்பித்தோம்)

அரசியவாதிகள் எவரும் வானத்தில் இருந்து குதித்து வந்து விடுவதில்லை. மக்கள் தேர்ந்து எடுக்காமல் இவர்கள் யாரும் பொறுப்புக்கு வர முடியாது. தலைவர்கள் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வது போல் தான் நடந்து கொள்வர் .

மற்ற துறைகளில் இருப்பவர்கள் அரசியலுக்கு வர பயப்படுவது ஏன் ? இன்னும் மன்னர் ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறதா? வாரிசுகளுக்கும்,நடிகர்களுக்கும் பின்னால் மக்கள் ஒளிவது ஏன்? அரசியல் என்ற வார்த்தையே அசிங்கமாகிப் போனது ஏன்? நல்ல பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பது, நல்ல பொண்ணைப் பார்த்து திருமணம் செய்வது என வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் யோசித்து முடிவெடுக்கும் நாம், நம்மை ஆட்சி செய்யும் மாந்தர்களிடத்தில் கோட்டை விடுவது ஏன்? கேமராவுக்கு முன்னால் இயக்குனர்கள் ஆட்டுவித்தபடி ஆடும் நடிகர்கள், பின்னர் நாட்டையே ஆட்டுவிப்பது எப்படி? இந்த தமிழ்த் திரை உலகில் இருந்து எப்போது தான் தமிழ் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்?



திரை வெளிச்சத்தில்,மக்கள் இருட்டில் !

கேள்விகள் விழுந்து கொண்டே இருக்கின்றது எனக்குள்.
கேள்விகள்,எனக்கானவை மட்டுமல்ல !

No comments: