Monday, June 19, 2017

சாய் கோடுகள்



தலை முதல் கால் வரை போர்வையால் இழுத்தி போர்த்தி உறங்கி கிடந்த வேளையில் "எந்திரிப்பா,ரொம்ப நேரமா போன் அடிச்சுக்கிட்டே இருக்கு,யாருன்னு தான் பாரு." என்று மெதுவாக கூப்பிட்டுக் கொண்டு இருக்கும் அம்மாவின் சத்தத்தைக்  கேட்டு  தூக்கம் கலைந்த  சலிப்புடன் போனை வாங்கினேன்.


ரம்யா தான் போன் செய்து இருக்கிறாள்.10 மிஸ்டு கால் வந்து இருக்கிறது,எதற்கு இவள் காலையிலே போன் செய்து இருக்கிறாள் என்ற யோசனையிலே "சரிம்மா, நீ காப்பி போட்டு கொண்டு வா." என்று அம்மாவை அனுப்பி விட்டு அவளை கூப்பிட்டேன்.

"ஹலோ மணி ஒன்பது ஆகுது. இன்னும் என்னா தூக்கம் வேண்டி கிடக்கு. சரி,அதை விடுங்க.இன்னைக்கி ஈவினிங் என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. என்ன பண்ணுவீங்களோ,ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. ஒண்ணு இப்போ வந்து என்னை கூட்டிட்டு போங்க,இல்லாட்டி நான் நேரா உங்க வீட்டுக்கே வந்துடுவேன். ஏன்னா இனிமேல் எங்க வீட்லயும் சாக்குபோக்கு சொல்லி சமாளிக்க முடியாது." 

"ஏன்மா,நான் துபாயில இருந்து நேத்து நைட் தான் ஊருக்கு வந்து இருக்கேன்.உடனே கோயம்புத்தூர் கிளம்பி வரச் சொல்றியே.வீட்டில என்ன, ஏது, எங்க போறன்னு கேக்க மாட்டாங்களா? இத்தனை நாள் பொறுத்திட்ட,இன்னும் கொஞ்சம் நாள் பொறுக்க முடியாதா,உன்னால? "

"உங்க கிட்ட டீட்டெயிலா  பேச இப்போ நேரம் கிடையாதுங்க. நான் இப்போ ஆபீஸ்ல இருக்கேன்.அஞ்சு மணிக்குள்ள உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வந்துடுங்க." என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

இந்தப் பெண்களே இப்படித் தான்,அவர்கள் சொல்வதைத் தான் நாம் செய்ய வேண்டும் .பெண்ணை பார்க்க வருகிறவன் இன்றேவா தூக்கிக் கொண்டு போய் விடுவான்? ம்,இதெல்லாம் சொன்னாலும் அவளுக்கு உறைக்காது.

அவசரம்,அவசரமாக குளித்து விட்டு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் பஸ் ஸ்டாப்புக்கு ஓட்டம் ஓட்டமாக விரைந்தேன். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பழனிக்கு செல்லும் பஸ்கள் இன்று அரை மணி நேரமாகியும்  ஒன்றையும் பார்க்க முடியவில்லை.இதற்கு இடையில் ரம்யாவிடம் இருந்து வேறு போன் மேல் போனாக வந்து கொண்டே இருக்கிறது. கிளம்பிட்டேன் என்று சொல்லியும் அவள் விடாமல் தொல்லை செய்யும் போது எதற்குத் தான் இந்த எழவெடுத்த காதல் என்ற எண்ணம் மனதில் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்து கூட்டமாக வந்த பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் தொங்கிக் கொண்டே ஒரு வழியாக பழனிக்கு வந்து சேர்ந்தாகி விட்டது.
பொள்ளாச்சி,கோயம்புத்தூர் என்ற கூப்பாட்டில் வரிசையாக நின்று கொண்டு இருந்த பஸ்களில் முன் நின்றுகொண்டு இருந்த ஒரு பஸ்ஸில் ஏறினேன். போனை எடுக்காமல் இருக்கவும் தொடர்ச்சியாக எஸ்எம்எஸ்களை அனுப்பி துவம்சம் செய்யத் தொடங்கி இருந்தாள் ரம்யா.சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு முதல் வேலையாக போனை அணைத்து வைத்தேன். இவளால் பஸ்ஸில் இருக்கும் அழகான பெண்களை கூட சைட் அடிக்க முடியாமல் போகிறது. 

'ஏங்க,இது பொள்ளாச்சி போகுமாங்க' என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு எதிர்பாராமல் மஞ்சப் பையுடன் வயதான ஒருவர் அருகில் அமர்ந்தார். பஸ் பழனியைத் தாண்டி விரைவாக சென்று கொண்டு இருந்தது.

 "தம்பி,இந்தாங்க முறுக்கு.சாப்பிடுங்க.என்னோட தங்கச்சி ஆசையா செய்து கொடுத்தது." என்றவரிடம் "இல்லைங்க அண்ணா,நீங்க சாப்பிடுங்க.நான் இப்போ தான் சாப்பிட்டேன்." என்றேன். இருந்தாலும் ஆசையாய் கள்ளங்கபடமின்றி என்னிடம் கொடுக்க வைத்த அவர் மனது என்னவாகி இருக்கும் என்ற உணர்வில் "நீங்க எந்த ஊருங்க,என்னா பண்றீங்க" என்று பேச்சை கொடுத்தேன்.

"எனக்கு எந்த ஊர்ன்னு சொல்றதுன்னு தெரியலைங்க. நான் பிறந்தது,அரவாக்குறிச்சி பக்கம். நான் சின்னப் பயலா இருக்கும்போதே என்னோட அப்பா இறந்திட்டார். தம்பி,தங்கச்சிகளை படிக்க வைக்கணும் அப்படிங்கிறதுக்காக கேரளா போனேங்க. இப்போ கோழிக்கோட்டுல  முப்பது வருஷம் ஆச்சுங்க. சொந்த வீடு இருக்கு.கல்யாணம் ஆகி பிள்ளைகுட்டிகள் எல்லாம் இருக்காங்க.தங்கச்சி பொண்ணுக்கு காதுகுத்து.அதான் இங்க வந்திட்டு போறேங்க."

"இங்க இருந்து போயி இந்த அளவுக்கு நல்லா வந்து இருக்கீங்கன்னா ரொம்ப சந்தோசங்க. இப்படி வரவும் போகவும் எத்தனை நாள் ஓட்டுவீங்க. ஊர் பக்கம் வந்து செட்டில் ஆகலாமே? "

"எனக்கு மட்டும் ஆசை இல்லையாங்க. நான் கொத்தனாரா வேலை பார்க்கிறேங்க. இங்க இருந்து நிறையப்  பசங்களை வேலைக்கு கூட்டிட்டு போறேன். எனக்கு ஒரு பையன்,ஒரு பொண்ணு. பையனுக்கு படிப்பு ஏறாம என் கூடவே வேலை பார்த்தான். பொண்ணு நல்லா படிக்குதுங்க. அதை மட்டும் நல்லா படிக்க வச்சிட்டா போதுங்க. அதை மட்டும் நம்ம பக்கம் கட்டிக் கொடுத்து ஊர் பக்கம் வந்திடலாம்ன்னு இருக்கேன்.பையன் மட்டும் ஒழுங்கா இருந்து இருந்தா நான் இப்படி எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லைங்க. நான் சொல்லி சொல்லிக் கேக்காம மலையாளத்துக்காரங்க பொண்ணை கட்டிக்கிட்டு வந்திட்டான். என்னோட பொண்ணு இப்போ தான் டென்த் படிக்கிறாங்க.வீடு சின்னதா இருக்கு. இதெல்லாம் அவனுக்கே புரியணும்." என்று தன்னை அடக்க முடியாமல் உளறி விட்டோம் என்ற பரிதவிப்பில் சிறிது நேரம் அமைதி ஆகி அப்படியே உறங்கத் தொடங்கி இருந்தார்.

நானும் இதற்கு மேற்கொண்டு பேசுவது சரியாகப்  படாமல் ரம்யாவைப் பற்றிய நினைப்பில் தூக்கமும் வராமல் கடந்து செல்லும் மரங்களை பார்த்துக் கொண்டே இருந்தேன்.பஸ் பொள்ளாச்சியை நெருங்கிக்  கொண்டு இருந்தது.

போன் அடிக்கும் சத்தம் கேட்டது.அனிச்சை செயலாக என்னுடைய சட்டைப்  பையை பார்த்து விட்டு,அடிப்பது அருகில் அமர்ந்து இருப்பவரின் செல் என்று தெரிந்து உறங்கிக் கொண்டு இருக்கும் அவரை எழுப்பினேன். அயர்ச்சியுடன் எழுந்த அவர் போனை எடுத்து ,"எப்படி இருக்கீங்க," என்று ஆரம்பித்தவர் முகம் சிறிது நேரத்தில் இருண்டு போயி வெளிறத் தொடங்கியது. பேச்சு மூச்சு இன்றி எதிரில் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தவர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கும் முன்னரே வண்டியில் இருந்து இறங்கத் தொடங்கினார். ஏதோ நடக்கக் கூடாத ஒன்று  நடந்து இருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்து நானும் அவரை பின் தொடர்ந்தேன்.

"அண்ணே,என்னங்கண்ணே ஆச்சு. சரி,வாங்க.டீ சாப்பிடுவோம்" என்று சொல்லி அவரை இழுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். தண்ணியை கொடுத்து முகம் கொப்பளிக்க வைத்த பின்னர் ஒரு வித நிதான நிலைக்கு வந்தார்.

"தம்பி,உங்க கிட்ட எப்படி சொல்றது. ம்ம்,என்னோட பொண்ணு இரண்டு நாளா வீட்டுக்கு வரலையாம். என் சம்சாரம் இது வரைக்கும் சொல்லாம இப்போ தான் சொல்றாங்க. பக்கத்து வீட்டு பையன் ஒருத்தனையும் காணோம். எனக்கு மட்டும் ஏன் தம்பி,இது மாதிரி நடக்குது. காதலிச்சு ஓடிப் போற வயசா அவளுக்கு  இது? நான் என்ன பாவம் பண்ணினேன்." என்று சொல்லும்போது தேம்பத் தொடங்கி விட்டார். ஆறுதல் சொல்லவோ,பதில் சொல்லவோ இயலாமல் நானும் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் சிறிது தணிந்து இருப்பதைக் கண்டு  "சரி வாங்கண்ணா,பாலக்காடு பஸ் கிளம்புது,பாருங்க. நீங்களே இப்படி இருந்தா அங்க உங்க வீட்டுக்காரம்மா  நிலைமையை நினைச்சுப் பாருங்க. வீட்டுக்கு போயி எனக்கு போன் பண்ணுங்க. " என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நிகழ்கிறது? எனக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்போது என்னிடம் வருபவர்களும் அவர்களுடய துன்பங்களை  ஏன் சொல்லத் தொடங்குகிறார்கள் அல்லது நான் ஏன் செவி மடுத்து கேட்கிறேன்? சற்று நேரத்துக்கு முன் பரிச்சயமான அவரின் நிலையைக் கண்டு இப்போது எனக்கும் ஏன் காதலுக்காக வீட்டை விட்டு ஓட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க தொடங்கி இருந்தது.
காதலிப்பவர்களுக்குத் தான் வலிக்க வேண்டும் இல்லையா,எனக்கு ஏன் தேவை இல்லாமல் வலிக்கிறது இப்போது ? சரி,வருவது வரட்டும்... நான் போகா விட்டாலும் ரம்யாவின் காதலன் ரமேஷ் அவளை கூப்பிடப் போவான் இல்லையா என்ற எண்ணத்தில் கோயம்புத்தூர் செல்லும் முடிவை கைவிட்டு பழனி செல்லும் பஸ்ஸை நோக்கி  நடக்கத் தொடங்கி இருந்தேன்.

No comments: