Tuesday, April 5, 2011

அன்றும் - இன்றும்

அவனுக்கு இந்த ஒரு வார காலமாகவே ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே இருமல் தாள முடியாத அளவுக்கு வந்து கொண்டு இருந்தது . மருந்து,மாத்திரை சாப்பிட்டும் புண்ணியம் இல்லை. காரணம் பிடிபடாமல் இருந்ததால் மண்டைகுத்தல் வேறு.
கொஞ்சவும், சீந்தவும் ஆள் இல்லாமல் வயல் வரப்புகளில் கிடந்த குழந்தையை அவள் ஏந்திக் கொள்வாள். கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகியும் புள்ளைபூச்சி இல்லாததால் வரும் குத்தல் பேச்சுகளை தாங்க முடியாமல் தோட்டத்துக்கு வருவதை வழக்கமாக்கி கொண்டாள். கேணி மேட்டுக்கரையில் அந்த பிள்ளையை உக்கார வைத்து குளிப்பாட்டி கற்றை,கற்றையாக இருக்கும் முடியை அள்ளி முடிந்து சடை பின்னி பொட்டு வைத்து விடுவாள். அந்த பிள்ளையும் தாயை விட அவளிடம் மிகவும் ஒட்டுதலாக இருந்தது. இன்னொருத்தியை தன் புருசனுக்கு கட்டிவைக்க போகிறார்கள் என அறிந்து அடைமழை பெய்த ஒரு நாளில் அந்த கேணியில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

என்றும் அவளிடம் இருக்கும் அந்த பிள்ளை
பெருமழையால் அன்று வயக்காட்டு பக்கம் வந்து இருக்கவில்லை. 'இந்த பிள்ளையை பார்த்து இருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டாளே, பாவி மக' என புலம்பாதவர்கள் இல்லை. அது நடந்து பின் நெடு நாட்களாக தனியாக அந்த குழந்தை மட்டும் கேணி மேட்டுக்கரையில் அழுது கொண்டு இருந்தது.

அவனுக்கு இன்று சற்று இருமல் குறைந்தது போல இருந்தது. ஆனால் அதெல்லாம் சிறிது நேரம் தான், திடீரென யாரோ அவன் தலையில் ஏறி விளையாடுவது போல இருந்தது. பெரும் கூச்சலுடன் அழுகை சத்தமும் கேட்டது.பின் அழுகை நின்று ,மெல்லிய கேவலுடன் "தங்கமே, எப்படியா இருக்க? இததனை நாளா உன் தலை முடியை கோதிக்கொண்டே,உன்னோடு தான் நான் இருந்தேன். இப்போது உன் தலையில் முடி இல்லாமல் நான் என்ன செய்வேன்? அதான் உன் தலையில வந்து விளையாடுறேன். உன்னைய விட்டு எப்படி ராசா , நான் எங்க போயி இருக்க குடி இருக்க முடியும்? " .

கண் முழித்துப் பேச வாய் எடுததவனுக்கு எதிரோ, பக்கத்திலோ யாரும் இல்லை. கனவோ,என்னமோ என்று புலம்பிக்கொண்டே உறங்கி விட்டான்.

அதற்கு அடுத்த மூன்று நாட்களில்
காலையில் காபி கொடுக்க எழுப்பச் சென்ற அவன் தாய், தலை இல்லாத அவன் உடலை கண்டு போட்ட கூச்சலில் ஊரே அலறியது...

எழவு வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் , "அந்த நாயக்கர் அம்மாவுக்கு இன்று திவசம் கழிப்பதாகவும், இன்று அந்த அம்மா உயிரோட இருந்து இருந்தால் அறுபது வயசு " என யாரிடமோ சொல்லிக் கொண்டு இருப்பது அவர்கள் இருவருக்கும் தெளிவாக கேட்டது.

2 comments:

எட்வின் said...

என்னமோ புரியுது! ஆனா புரியல :)

செம்மலர் செல்வன் said...

தல,எனக்கும் புரிய மாட்டேங்குது:-)