கேட்பதற்கும், சொல்லுவதற்கும் நன்றாகத் தான் இருக்கிறது. எல்லாம் வல்ல அல்லாவின் கிருபையால் எப்பொழுதும் இந்நாட்டினில் உணவுக்கு பஞ்சம் வராத அளவுக்கு கடலில் மீனும்,பாலை நிலத்தில் ஈச்சம் பழமும் கிடைக்குமென முன்னோர்கள் கூறியதுபோல கிடைத்துக் கொண்டே இருக்கிறது. போதாக்குறைக்கு நாற்பது,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எண்ணைய் வளமும் கண்டுபிடிக்கப்பட்டடு சுல்தானுடைய நாடானது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு வருகிறது. நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வோமே தவிர மற்ற நாட்டவரின் வாளாலோ, குண்டாலோ, சதியாலோ சாக மாட்டோம் என்பது மட்டும் நான் திங்கிற இந்த கோதுமை ரொட்டியின் மீதும், ஆட்டிறைச்சியின் மீதும் உறுதி.
ஊர்க் கதை எல்லாம் நமக்கு எதற்கு? சொந்தக் கதைக்கு வந்து சேருவோம். எனக்கு இப்பொழுது 29 வயதாகி விட்டது. ஒரு பொண்ணை கல்யாணம் செய்யலாம் என்று பார்த்தால் மாசமாசம் சம்பளமாய் கிடைக்கிற 350 ரியாலில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சென்ற ஆண்டு புதியதாக வாங்கிய காருக்கு லோன், டீசல், சாப்பாடு, வீட்டு செலவுக்கு கொடுக்க வேண்டியது, புதிய போன் வாங்க வேண்டியது,.. இதுவே பத்த மாட்டேன் என்கிறது.
இதில் கல்யாணம் வேறு செய்ய வேண்டுமென்றால் பெண்ணுடைய அப்பனுக்கு கொடுக்க 5,000 ரியால், அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய ஒரு தனி அறை அமைக்க 3,000 ரியால், திருமண நகை , விருந்து செலவு 4,000 ரியால் என குறைந்தது 12,000 ரியாலாவது தேவைப்படும் போல. பேங்கில் லோன் எடுக்கலாம் என்றாலும் கையில் கொஞ்சம் சேமிப்பு சுத்தமாக இல்லை. முழுவதும் லோனாக எடுத்தால் கல்யாணத்துக்குப் பின் எதை வைத்து குடும்பத்தை ஓட்டுவது?
நமக்கு இப்படியென்றால் மாசம் வெறும் 40,50 ரியால் சம்பாதிக்கும் பெங்காலி 80,100 ரியால் சம்பாதிக்கும் இந்தி,பாகிஸ்தானிகள் எல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள்? நாம் வாழும் இந்த உலகம் ஏன் இவ்வாறு உள்ளது? மனிதனின் தோலை வைத்து விலை நிர்ணயிக்கிற அடிமை கலாச்சாரம் என்று தான் தீரும்? ஒரு வேலையும் செய்யாமல் தஸ்புஸ் என்று இங்கிலீஷ் பேசுவதை மட்டும் முழுத் தகுதியாக கொண்ட வெள்ளைக்கார கிழவர்கள் மாசம் 5,000 ரியால் சம்பளம் வாங்கி கொண்டு மாசத்துக்கு ஒரு பிலிப்பைனிக்காரியை அழைத்துக் கொண்டு சுத்துகிறார்கள். உள்ளூர் அரபிகளும் மட்டும் சளைத்தவர்களா என்ன! பத்து ரியால் கொடுத்து ஒரு மணி நேரம் அனுபவித்த சுகம் போரடித்துப் போய் முன்கூட்டியே பதிவு செய்து தாய்லாந்தில் போய்
உல்லாசமாக அனுபவித்து வருவது தான் தற்போதைய டிரெண்டாக இருந்து வருகிறது. எனக்கென்னவோ இந்த எழவெல்லாம் பிடிப்பேனா என்கிறது.
இப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் ஒரு பெண் தானாகவே என்னை திருமணம் செய்ய முன் வந்தாள். 5,000 ரியால் தேவையில்லை. 1,000 ரியால் கொடுத்தால் கூட போதுமென்றாள். கணவனைப் பிரிந்து வாழ்கிற அவளை கட்டிக் கொள்வதிலோ எனக்கு எந்தக் குழப்பமும் இல்லாமல் இருந்தது. வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விசயத்தைக் கூறி திருமணத்தை உறுதி செய்வதற்கு உரிய வேலைகளை தொடங்க வேண்டும் என்று கூறி விட்டு இருந்தேன். இங்கு தான் ஒரு எதிர்பாராத சிக்கல் வந்து முளைத்து விட்டது. திருமண விசயமாக பெண்ணுடைய அப்பனைப் பார்க்கப் போன எனது அப்பன் அப்படியே பெண்ணையும் பார்த்து விட்டு வந்தது தான் பெரிய வினை ஆகி விட்டது. சும்மா வாயை வைத்துக்கொண்டு இருக்காமல்
பெண் கொஞ்சம் மூப்பு போலிருக்கிறது. எனது மகனுக்கு கட்டி வைத்தால் நன்றாக இருக்காது. நான் வேண்டுமானால் 3,000 ரியால் தருகிறேன். எனக்கு கட்டி வையுங்கள், எனக்கு இன்னும் அரசாங்க சம்பளம் வருகிறது. யோசித்துப் பாருங்கள் என்று பெண்ணுடைய அப்பனின் மனதை கலைத்துப் போட்டான் எனது அருமை அப்பன்.
அப்புறம் என்ன, மகனுக்கு பார்த்த பொண்ணை அப்பன் கட்டிக் கொண்டு போன கதை தான் நடந்தது. இதனோட நிற்காமல் ஊர் சுத்தப் போகிறேன் பேர்வழி என்று சொல்லி இந்தியா சென்ற அப்பன் திடீரென ஹார்ட் அட்டாக் வந்து அல்லா அவரை அழைத்துக்கொண்டார்.
இங்கே செத்துத் தொலைத்து இருந்தாலும் பரவாயில்லை, பிணத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்குள் பட்ட பாடு. ம், என்ன செய்வது ஆயிரம் இருந்தாலும் என் அப்பனில்லையா? மூத்த மகன் நான் செய்யாமல் வேறு யார் செய்ய முடியும்? திருமணம் செய்வதைப் பற்றிய நினைப்பினை மறந்து விட வேண்டும். இனிமேல் தான் எனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. நோயாளியான அம்மா, ஐந்து வயது முதல் இருபத்தைந்து வயது வரை வெவ்வேறு இரகமாக இருக்கிற தம்பி, தங்கைகளை யார் கரையேற்றுவது? இவர்களுக்கு இனி நானே தகப்பன் ஆவேன் !