Friday, May 3, 2019

இன்றைய தமிழக அரசியல் சூழல் - ஓர் பார்வை

எண்பதுகளில் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளுமே அதிகமாக இருந்தன.எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும்,ஏழ்மையான சூழ்நிலைகளில் வாழ்பவர்களாக இருந்தாலும் ஒரே பள்ளியில் படிக்க முடிந்தது. தனக்கென்று கொள்கைப் பிடிப்பும்,நெறிமுறைகளும் கொண்ட ஆசிரியர்கள் மிகுதியாக இருந்த காலம் இது. நாட்டு நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள தினசரித் தாள்களும்,இதழ்களுமே உதவியாக இருந்தன. வகுப்புகளில் பாடங்களுக்கு இணையாக நன்னெறிகளும்,ஒழுக்கமும் போதிக்கப்பட்டு அதனோடு அரசியல் பேசுகிற ஆசிரியர்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை & இலக்கிய செயல்பாடுகளுக்கு நேரம் இருந்தது. மாணவர்களுக்கும் ஒரளவுக்கு ஆர்வமாகவே இதனைச் செய்தனர். வீடு,காடு,கடையில் கூட வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்.


இன்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாகி மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே முதன்மையாகி விட்டது. வீட்டுக்கு வந்தாலும் கேம்ஸ், டிவி, கிரிக்கெட் என்றளவில் சுருங்கி விட்டனர். ஒப்பீட்டளவில் திறன் குறைந்த படிப்புத் தகுதிக்கு குறைவாக ஊதியம் பெறுகிற ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதை விட பிள்ளைகளை மேய்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது.கல்வியைத் தொழிலாக கருதும் அதிபர்களுக்கு அட்மிசன்,ரிசல்ட் மட்டுமே குறி.

ஒரு கட்டத்தில் திமுக,அதிமுக இரண்டு கட்சிகளும் மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பாமல் கலை,அறிவியல் கல்லூரிகளில் தேர்தல் நடத்துவதை கூடுமானளவுக்கு தவிர்த்து இன்றும் முற்றிலுமாக ஒழித்து விட்டனர். கோழிப் பண்ணைகளை விட கூடுதலாக பொறியியல் கல்லூரிகளை திறந்து விட்டு மாணவர்களை அடைத்து வைத்து இருக்கின்றனர்.


இப்படி இருபது வயது வரை அரசியல் அறிவே இல்லாமல் வருகிறவன் ‘அரசியல் ஒரு சாக்கடை’ என சொல்வதில் வியப்பொன்றும் இல்லை. வாரிசு அரசியலை குற்றம் சாட்டுவான். முதல் நாளில் சசிகலாவை திட்டி விட்டு அடுத்த நாளில் தினகரனை தலைவனாக ஏற்றுக் கொள்வான். ஏனென்றால் சினிமாவில் வருகிற ட்விஸ்ட்டை போலத் தான் அவனுக்கு அரசியல் என்றாகி விட்டது. இல்லையென்றால் இத்தனை ஆண்டுகளாக சினிமா தவத்தில் இருக்கிற கமல்,ரஜினியை முதல்வர் வேட்பாளராக எப்படிக் கருதுவான்?போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றாலே அரசியலில் கவனிக்கப்படுவார்கள் என்ற நிலைமை மாறி கோடிகளே இன்று வேட்பாளர்களை தீர்மானிக்கும் இடத்துக்கு வந்து விட்டது. இரவுடிகள், பண முதலைகள், வாரிசுகள், சாமியார்கள் என பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்பு இல்லாதவர்களே தேர்தலில் நின்று வெற்றி அடைகின்றனர்.


‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’, இந்தி தெரியாமல் வேலை இழந்தோம்’ என்று குரலை உயர்த்துகிற தமிழ் / இந்திய தேசிய ஆர்வலர்கள் காங்கிரஸ் ஆட்சிகளில் இருந்து தமிழகத்தை மீட்ட அண்ணாத்துரை, கருணாநிதி, எம்ஜிஆரின் உழைப்பை தவறியும் கூட பேசுவதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தி பேசுகிற மாநிலங்கள் (உபி,பீகார்,மபி,இராஜஸ்தான்) அடைந்த வளர்ச்சியையும், தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நம்மை இந்தி படிக்கச் சொல்லி விட்டு அவர்கள் ஆங்கிலத்தை தொட ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் வட மாநிலத்தவர் அரசியல்,தொழில்,வேலை வாய்ப்பு பெற நாமும் இந்தி தெரிந்து வைத்து இருந்தால் நல்லதென்று நினைக்கின்றனர்.


சிற்றூர்களிலும் பள்ளிகளைத் தொடங்கி இலவசக் கல்வி, மதிய சத்துணவு, மாநில சுயாட்சி , வேளாண்மைக்கு இலவச மின்சாரம், பெண்ணுரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, மருத்துவத்துறை, தொழிற் வளர்ச்சி, தமிழக நிலவமைப்பு பற்றிய எவ்வித தெளிவுமில்லாமல் மத,சாதி அரசியலுக்குள் சிக்க வைக்கப்படும் இளைஞர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. மத,சாதி அரசியலால் பயன் பெறுகிறவர்களைப் பற்றி சந்தேகம் எதுவுமின்றி மூடத்தனத்துடன் இறங்கி விடுகின்றனர். தேவையற்ற மொழி,இன,சாதி,பழங்காலப் பெருமை பேசிப் பேசி வட மாநிலத்தவருக்கு உடலுழைப்பு வேலைகளை ஈந்து விட்டு மதுக் கடைகளை நாடுவதில் சாகசமும்,சாதனையும் புரிகின்றனர். ஊருக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக குடித்தது போய் இன்று குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலைமையே நிலவுகிறது. கல்வித் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காதது, அப்படியே வேலை கிடைத்தாலும் குறைவான ஊதியத்தில் பணி செய்வது , செலவினங்கள் அதிகரிப்பதும் கூட ஒரு காரணமே.


தன்னை மேம்படுத்திக் கொள்ள தகுதிகளை வளர்த்துக் கொள்வதை விட்டு பொதுநல அரசியலில் இருந்து மெல்ல மெல்ல நழுவி தற்குறித்தனமான அரசியலில் இறங்கி விட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து அவர்கள் வளர்ந்து விட்டதாக பொறாமைப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்களும் அதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தான் இந்தளவுக்கு வளர்ந்துள்ளோம் என்பதை ஒளித்து மறைக்கின்றனர். பொருளாதார இட ஒதுக்கீடு என்ற போர்வையில் இன்றுள்ள இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்கிறவர்களுக்கு விபரீதம் புரியாமல் தலையாட்டுகின்றனர். ம், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


நிறைவாக,

பெற்றோர்கள் இப்பொழுது செய்து கொண்டு இருக்கிற வசதியான கல்வி, பொருள் ஈட்டுதல்களோடு ஒழுக்கம், சமத்துவம், வெறுப்பு விருப்பற்ற சகோதரத்துவம், குறைந்தபட்ச உழைப்பு, தேவைகளை குறைத்தல், அரசியல், சமூக அறிவை வீட்டில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள் பெருகி வரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள இது ஒரளவுக்கு உதவும்.