Friday, December 30, 2011

அக்கிலிப்பிக்கிலி

"எங்க இருந்துடா இப்படி ஒரு கொத்தவரங்கா மாதிரி இருக்கிற இவளைப் போய் பிடிச்ச.  உன்னோட ரசனை இந்த அளவுக்கு மட்டமா போயிடிச்சே  ."

"டேய்,எனக்கு என்னானு சொல்லத் தெரியல.பொண்ணுனா அழகா அறிவா இருக்கணும்,அப்படி எதுவும் என்கிட்டே கிடையாது. பொண்ணைப் பார்த்தா நாம அதை பொண்ணா உணரனும்,அவ்வளவு தான். அது எனக்கு இவளைப் பார்த்தப்ப அதான் தோணுச்சு. அதுனால தான் காதலிக்கலாம்ன்னு முடிவு பண்ணினேன்."

என்னுடைய பதிலில் அவன் சமாதானம் ஆகாமல் போனது போலவே எனக்கும் அவளை காதலிப்பதற்கு வேறு சில காரணங்கள் இருந்தது.

என்னை விட உயரமாய் இருக்கும் பொண்ணை எப்படியாவது காதலிக்க வைத்து விட வேண்டும். அப்படி அவள் காதலிக்காமல் போய் விட்டாலும் இவன் போய் என் கூட சுத்துறானே/தொந்தரவு பண்றானே என்கிற எண்ணம் அவளுடைய வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற சைக்கோத்தனமான முடிவில் அப்போது இருந்தேன். ஆனால் அதிலும் இவள் எப்படி சிக்கிக் கொண்டாள் என்பது இன்று வரை எனக்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இப்படியான குழப்பங்களோடு சுமார் ஆறு மாத காலங்களாக காலையில் அவள் வீட்டில் இருந்து  கிளம்புவதில் இருந்து,சாயங்காலம் அவளை வீட்டில் கொண்டு போய் விடும் வரை ஒரு சம்பளம் இல்லாத வாட்ச்மேனாக சுற்றிக் கொண்டு இருந்தேன். என்றென்று அறியாத ஒரு நாள் பொழுதில் அவளை தீவிரமாக காதலிக்கத் தொடங்கியது தான் இவ்வளவு தொல்லைகளை கொண்டு வந்து சேர்க்கும் என தெரியாமல் போனது.

காதலிக்க தொடங்கிய பின்னர் காதலை சொல்லாமல் விடுவது தவறு என்பது காதலால் தோற்றுப் போன நண்பர்களின் காதல்கள் எனக்கு படிப்பினையை கொடுத்து இருந்தது. நேரில் சென்று காதலை சொல்லலாம் என்றால் அவள் எப்பொழுதும் நண்பிகளோடு சுற்றிக் கொண்டே இருக்கிறாள்.

எப்படி காதலை சொல்வது என்று மண்டையை உடைத்து வேறு வழியே இல்லாமல் கடைசியாக ஒரு திருமண பத்திரிக்கையை அடிப்பது (என் பெயரையும்,அவள் பெயரையும் போட்டு தான்) என முடிவு செய்து அவளிடம் எனக்கு கல்யாணம்,நீங்க கட்டாயம் வரணும் என்று அவளிடம் தைரியமாக நீட்டினேன். அவளும் பத்திரிக்கையை பிரிக்காமல் (தொல்லை ஒழிந்தது என்று நினைத்து இருப்பாள் போல) முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு கண்டிப்பா வர்றேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.

வீட்டில் சொல்லி என்னை அடி வாங்க வைத்து இருப்பாள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி செய்து இருந்தால் கூட ஒன்றும் பெரியதாக வலித்து இருக்காது. அவள் ஊரை விட்டு எங்கோ போய் விட்டாள் என்பது மட்டும் சில நாட்கள் கழித்து எனக்கு தெரிய வந்தது.

சரி,இன்று இதையெல்லாம் சொல்லி உங்களிடம்  புலம்ப   வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கேட்கிறீர்களா? இன்று அவளுக்கு பிறந்த நாள்.இதே மாதிரியான ஒரு பிறந்த நாளில் தான் அவளிடம் போய் பத்திரிக்கையை நீட்டி இருந்தேன்.

ம்ம்..இன்னும் கதை முடியவில்லை. இதை எழுதலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ஒரு மெயில் வந்து இருக்கிறது. அவள் தான் எனக்கு அதே கல்யாண பத்திரிக்கையை அனுப்பி இருக்கிறாள்,நாள் கிழமை வருஷம் மட்டும் மாற்றி விட்டு. 

அக்கிலிப்பிக்கிலி , அக்கிலிப்பிக்கிலி !


No comments: